சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகாமல் இருப்பது மாணவர்கள் குழப்பம்

சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. கல்லூரிகளில் இடங்கள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் தேர்வு முடிவு குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருப்பது மாணவ-மாணவிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதன்படி பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மார்ச் 2-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 2-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் உள்ள 70 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படித்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினார்கள். மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. படித்து பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு முன்பாகவே, சி.பி.எஸ்.இ. மாணவ-மாணவிகளுக்கு தேர்வு தொடங்கி முடிவு பெற்றது. மாநில பாடத்தில் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் எழுதிய பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பாக இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் கடந்த வாரம் ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியீடு தொடர்பாக இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருப்பது மாணவ- மாணவிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரிகளில் சேருவது எப்படி?

மத்திய பாடத்திட்டத்தில் ஐ.சி.எஸ்.இ. பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கும், மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய எங்களது தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு மே மாதம் 2-வது வாரத்திலேயே தேர்வு முடிவு வெளியாகி விட்டது. இந்த ஆண்டு மே மாதம் முடிவு பெறும் நிலையில் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவு வெளியாகததால் எங்களால் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. கணிதம், அறிவியல், கணினி அறிவியல், வணிகவியல் போன்ற பாடங்களுக்கு இடங் கள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. எங்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதிகாரி விளக்கம்

இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று தெரிகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமான தேதி பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை‘ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top