ஐபிஎல்: இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

doniஐ.பி.எல். கிரிக்கெட்டின் 2–வது தகுதி சுற்றில் சென்னை அணி பெங்களூரு அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

8–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு ராஞ்சியில் அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சை நடத்தின. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, பனிப்பொழிவின் தாக்கத்தை மனதில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணியில் கிறிஸ் கெய்லும், கேப்டன் விராட் கோலியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முதல் ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹராவின் 2–வது பந்தை கெய்ல் சிக்சருக்கு தூக்கினார். அவரது அடுத்த ஓவரில் விராட் கோலியும் பவுண்டரி, சிக்சர் விரட்டினார்.

ஆனாலும் டோனி, நெஹராவை தொடர்ந்து பயன்படுத்தினார். அதற்கு ஏற்ப பீல்டிங் வியூகத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். இறுதியில் டோனியின் யுக்திக்கு பலன் கிடைத்தது. நெஹராவின் 3–வது ஓவரில் கோலி (12 ரன்), ‘ஷாட்பைன்லெக்’ திசையில் நின்ற மொகித் ஷர்மாவிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த அபாயகரமான பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் (1) அதே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நெஹரா ஒரே ஓவரில் வைத்த இரட்டை செக்கால் பெங்களூரு அணி அதிர்ச்சிக்குள்ளானது. மறுமுனையில் அஸ்வின் சுழலில் மிரட்ட, அவர்களின் ரன்வேகம் சரிந்தது. ‘பவர்–பிளே’யான முதல் 6 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த சீசனில் ‘பவர்–பிளே’யில் பெங்களூரு அணியின் குறைந்த ஸ்கோர் இது தான்.

3–வது விக்கெட்டுக்கு இறங்கிய மன்தீப்சிங் (4 ரன்) வந்த வேகத்தில் நடையை கட்டியதால் அந்த அணியின் ஸ்கோர் மேலும் தளர்ந்தது. 10 ஓவர்களில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுக்கு 46 ரன்களுடன் நெருக்கடியில் தத்தளித்தது.விக்கெட் வீழ்ச்சியால் அதிரடி சூரர் கிறிஸ் கெய்ல் சிறிது நேரம் நிதானத்தை கடைபிடித்தார். ஆடுகளத்தன்மை வேகம் குறைந்து (ஸ்லோ) காணப்பட்டதால் பந்து அதிகமாக எழும்பவே இல்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் தடுமாற்றத்திற்குள்ளானார்கள்.

பொறுமையாக ஆடிய கெய்ல் அதிரடியில் இறங்கிய சமயத்தில் விக்கெட்டை பறிகொடுத்து விட்டார். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ரெய்னாவின் ஓவரில் தொடர்ந்து இரு சிக்சர் விளாசிய கெய்ல், அதே ஓவரில் மீண்டும் சிக்சருக்கு முயற்சித்த போது அவரிடமே கேட்ச் ஆனார். கெய்ல் 41 ரன்களுடன் (43 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார்.இறுதி கட்டத்தில் பெங்களூரு வீரர்களால் பெரிய அளவில் ரன்வேட்டையாட முடியவில்லை என்றாலும் கடைசி 5 ஓவர்களில் 49 ரன்கள் சேர்த்தனர். 7 பவுலர்களை பயன்படுத்திய சென்னை கேப்டன் டோனி, அடிக்கடி பீல்டிங்கை மாற்றி எதிரணியின் ரன்விகிதத்தை வெகுவாக கட்டுப்படுத்தினார். 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய பெங்களூரு அணி 8 விக்கெட்டுக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கிய ஆடிய சென்னை அணியில் ஸ்மித் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். டூ பிளஸிஸ் 21 ரன்களில் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹஸ்ஸி 56 ரன்களில் வெளியேறினார். சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஐபிஎல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் வரும் 24 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதி போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top