மாவோயிஸ்டு தம்பதி ரூபேஷ்-சைனா இன்று எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்.

giving-shelter-to-Naxalite-leaderCouplesநக்சலைட்டு தலைவனுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் மாவோயிஸ்டு தம்பதி ரூபேஷ் – சைனா இன்று எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர் செய்யப்படுகின்றனர்.

நக்சலைட்டு தலைவனுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் மாவோயிஸ்டு தம்பதியான ரூபேஷ்-சைனா ஆகிய இருவரையும் எர்ணாகுளம் கோர்ட்டில் இன்று (புதன்கிழமை) ஆஜர்படுத்த கோவையில் இருந்து கேரள போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்கிறார்கள்.

கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ குடித்துக்கொண்டு இருந்த மாவோயிஸ்டுகளான ரூபேஷ், அவரது மனைவி சைனா, அனூப், கார்த்தி என்கிற கண்ணன், ஈசுவரன் என்கிற வீரமணி ஆகிய 5 பேரை கடந்த 4-ந் தேதி கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ரூபேஷ் மாவோயிஸ்டு இயக்க தலைவனாக செயல்பட்டதும், அவர்கள் 5 பேர் மீது கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களிலும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், இந்த வழக்குகளில் அவர்கள் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது.

அத்துடன் கடந்த 2008-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் குடகு பொன்னம்பேட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக ரூபேசை குடகு கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் ரூபேசை குடகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இதுகுறித்து கோர்ட்டுக்கு கர்நாடக போலீசார் தகவலும் கொடுத்தனர்.

எனவே இந்த வழக்கு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்று கர்நாடக போலீசார் ரூபேசை கர்நாடகா அழைத்துச்செல்ல உள்ளனர். அதுதவிர ரூபேஷ்-சைனா மீது கடந்த 2011-ம் ஆண்டில் வடமாநிலத்தை சேர்ந்த நக்சலைட்டு இயக்க தலைவனுக்கு கேரளாவில் அடைக்கலம் கொடுத்த வழக்கு எர்ணாகுளம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

ரூபேஷ்-சைனா உள்பட 5 பேர் கோவையில் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் எர்ணாகுளம் கோர்ட்டு மாவோயிஸ்டு தம்பதிகளான ரூபேஷ்-சைனாவை இன்று (புதன்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி கேரள போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதன்படி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ரூபேஷ்-சைனாவை கேரள போலீசார் பலத்த பாதுகாப்புடன் எர்ணாகுளம் அழைத்துச்செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதற்காக அவர்கள் கோவையில் முகாமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக மாவோயிஸ்டு தம்பதியான ரூபேஷ்-சைனாவை அழைத்துச்செல்ல கேரள போலீசார் கோவை வந்து உள்ளனர். அவர்களை எப்போது அழைத்துச்செல்லுவார்கள் என்பது தெரியாது. இன்று (நேற்று) இரவோ அல்லது நாளை (இன்று) அதிகாலையிலோ அழைத்துச்செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

பாதுகாப்பு தொடர்பாக அவர்கள் இதுவரை எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. அவ்வாறு அவர்கள் கேட்டால் போதிய பாதுகாப்பு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கேரளா மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால் அவர்கள் இருவரையும் கேரள போலீசார் பலத்த பாதுகாப்புடன்தான் அழைத்துச்செல்வார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top