7 தமிழர்கள் விடுதலையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

ramadossராஜீவ்காந்தி கொலை வழக்கில் எந்தத் தவறும் செய்யாமல் தண்டிக்கப்பட்டு 24 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர் விடுதலை செய்யப்படுவதை தமிதழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வழக்கில் ஆஜராவதற்கான மூத்த வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

7 தமிழர் விடுதலைக்கு எதிரான வழக்கை வரும் ஜூலை 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இவ்வழக்கு கிடப்பிலேயே போடப்பட்டு விடுமோ? என்ற கவலையை உச்சநீதிமன்ற அறிவிப்பு போக்கியிருக்கிறது.

ராஜீவ்கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, இவர்களையும், ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு ஆணையிட்டது. அதன்படி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வு, தொடக்கக் கட்ட விசாரணைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி இறுதிகட்ட வாதத்தைத் தொடங்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி விசாரணை தொடங்கியிருந்தால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 7 தமிழர்களும் விடுதலையாக வாய்ப்பு இருந்தது.

ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த தேதியில் விசாரணை தொடங்காததுடன், அமர்வுக்கு தலைமையேற்றிருந்த அப்போதைய தலைமை நீதிபதி லோதா கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றதால் விசாரணை அமர்வு செயலிழந்து விட்டது. இதனால் 7 தமிழர்களின் விடுதலை எட்டாக்கனியாகி விடுமோ என அஞ்சிக் கொண்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றமே இவ்வழக்கை ஜூலை 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளது.

சில ஆரம்ப கட்ட நடைமுறைகளுக்குப் பிறகு ஜூலை மாதத்திலேயே இறுதி வாதம் முடிவடையக்கூடும். இதை உணர்ந்து இவ்வழக்கை வெற்றிகரமாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, இனியும் தாமதிக்காமல் இவ்வழக்கில் ஆஜராவதற்கான மூத்த வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு தமிழக அரசு நியமிக்க வேண்டும். அதன்மூலம் இவ்வழக்கில் அனைத்து தமிழர்களும் விடுதலை செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top