திருநெல்வேலி அருகே ராஜீவ்காந்தி உருவ சிலை உடைப்பு: போலீசார் தீவிர விசாரணை!

rajiv statueதிருநெல்வேலி மாவட்டம் கடையத்தில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி சிலையை இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் உள்ள 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தமிழர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று காங்கிரஸ் தரப்பில் எதிர் போராட்டமும் பல்வேறு இடங்களில் நடந்தது.

இது தொடர்பாக சென்னை காங்கிரஸ் அலுவலகம் மற்றும் குமரி மாவட்டம் திருவட்டாரில் காங்கிரஸ் கட்சியினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து நேற்று நெல்லை ரெயில் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டமும் நடைபெற்றது. நெல்லை சந்திப்பில் காங்கிரஸ் தலைவர்களின் கொடும் பாவியை எரித்த 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை கடையம் அருகே உள்ள வடக்கு பாப்பான்குளம் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தியின் அரை உருவ சிமெண்டு சிலையில் தலை பகுதி துண்டாக உடைத்து வீசப்பட்டு இருந்தது.

இச்சம்பவத்தை கேள்விப்பட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அப்பகுதியில் கூடினர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ் செல்வன் உள்பட முக்கிய தலைவர்களும் அங்கு கூடி சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் நெல்லை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், கடையம் இன்ஸ்பெக்டர் முருகன், இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி உள்பட ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காங்கிரஸ் கட்சியினரை சமாதானப்படுத்தினர்.

இது தொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top