பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு: ஜூலை 15ல் உச்ச நீதிமன்றம் விசாரணை!

LTTE_rajiv_erarivalan-murugan-santhanமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 15ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் குறிப்பிட்ட காலக்கெடு கொடுத்து மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு கேட்டது. ஆனால், மத்திய அரசு தாமதிக்கவே, 7 பேரையும் விடுதலை செய்வதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதையடுத்து, 7 பேரின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அதில், முக்கிய வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கொண்ட அமர்வு, இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. பின்னர் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 7 பேரின் விடுதலையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

ஓராண்டுக்கு மேல் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு தற்போது உயிர் பெற்றுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்த வழக்கு மீதான விசாரணை ஜூலை 15ஆம் தேதி தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top