இந்தியா உட்பட 34 நாடுகளின் நிவாரணப் படைகளை வெளியேற உத்தரவிட்டது நேபாளம்!

Nepal-earthquake-4இந்தியா உட்பட 34 நாடுகளின் நிலநடுக்க மீட்புப் படையினரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது நேபாள அரசு. பெரும்பான்மையான மீட்புப்பணி முடிந்து விட்டதால், மீதமுள்ளதை நேபாள பேரிடர் மீட்புக் குழுவினரே பார்த்துக் கொள்வர் என அந்நாடு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த மாதம் 24ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. எனவே பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கத்தால் சிதைந்து போன நேபாளத்திற்கு சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அங்கு இந்தியா உட்பட 34 நாடுகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. நேபாளத்தின் நகர்ப்பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டும் வெளிநாட்டுக் குழுவினர், சாலை வசதிகள் சரிவர இல்லாத கிராமப்பகுதிகளில் போதுமான மீட்புப் பணிகளில் ஈடுபட தயங்குகின்றன என நேபாள மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனிடையே, நிலநடுக்கத்தில் நிலைகுலைந்துபோன நேபாளத்தில் செய்தி சேகரிக்கும் இந்திய செய்தி ஊடகங்கள், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. மீட்புப் பணிகளை இந்திய ஊடகங்கள் உணர்வற்று, எதிர்மறை உளவியல் அணுகுமுறையுடன் செய்திகளை வெளியிட்டு பரபரப்பாக்கியதாக நேபாள அளவில் ட்விட்டரில் கருத்துக்கள் குவிந்தது.

இந்நிலையில், காத்மாண்டு உள்ளிட்ட முக்கிய நகர்ப் பகுதிகளில் மீட்பு பணிகள் முடிவடைந்து விட்டதால், எஞ்சியுள்ள நடவடிக்கைகளை தமது அரசே செய்துவிடும் என்று நேபாளத்தின் பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. இதனால், இந்தியா உட்பட 34 நாடுகளின் மீட்புக் குழுவையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு நேபாள அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நேபாள அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஜப்பான், துருக்கி, உக்ரைன், இங்கிலாந்து, நெதர்லாந்து மீட்பு படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன.

9 நாள் மீட்புப் பணி முடிந்த நிலையில் நேபாள அரசு இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top