விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல: இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பு

LTTE விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது என்று இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ் தேசிய செயல் வீரர்கள், இத்தாலியில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்து வழங்கினர். இது சர்வதேச பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிரானது என தமிழ் தேசிய செயல்வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடந்த 2010 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள் என கடந்த 2011 ஆம் ஆண்டில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தின் மூலம் மருத்துவம், நீதிமன்றம், கல்வி, பொருளாதாரம், சீரான ராணுவ கட்டமைப்பு ஆகியவை உள்ளடக்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்த இயக்கம் ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியது.

எனவே, இந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது. அந்த வகையில் இத்தாலி தமிழ் தேசிய செயல் வீரர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் அர்த்தமற்றது. மேலும், விடுதலைப்புலிகள் இயக்கம் போர்க்குற்றம் புரிந்திருப்பின் அவற்றிற்கான விசாரணையை சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான நீதிமன்றமே விசாரிக்க தகுதியானது எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இத்தாலி அரசு மேல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. அந்த மனு மீதான விசாரணை இத்தாலி நீதிமன்றத்தில் கடந்த 27 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 9 நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அந்த தீர்ப்பில், ”விடுதலைப் புலிகள் இயக்கம், ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகவே பார்க்கப்பட வேண்டும். அதை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது. எனவே, கீழ் நீதிமன்றம் தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாகவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள்” என தீர்ப்பளித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top