கோவையில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம்: ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை!

earthquakeகோவை மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தேசிய பேரிடர் மையத்தின் ஆராய்ச்சியாளர் எச்சரித்துள்ளார்.

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது நல்லேபள்ளி. இந்தப் பகுதியில் 1900-ஆம் ஆண்டு, பிப்ரவரி 8-ஆம் தேதி அதிகாலை 3.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. 115 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் குறித்து கேரள அரசின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நல்லேபள்ளியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அது தமிழகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

இந்த நிலநடுக்கத்துப் பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2004-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் காங்கயம், திருப்பூர், சேலம் வரை சிறிய நில அதிர்வுகள் உணரப்பட்டது. தொடர்ந்து, 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி 11, 14-ஆம் தேதிகளில் கேரளத்தில் 2.2 முதல் 2.8 வரை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் நல்லேபள்ளியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை மையமாக வைத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தேசிய பேரிடர் மையத்தின் பாலக்காடு மாவட்ட ஆராய்ச்சியாளர் சரவணன் கூறியதாவது:

நல்லேபள்ளியில் 1900-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் தென்னிந்தியாவில் கடந்த 250 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகப் பெரியதாகும். ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து 70 முதல் 130 ஆண்டுகளுக்குள் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சர்வதேச நிலநடுக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 2010-ஆம் ஆண்டு, சித்தூர் வட்டத்துக்கு உள்பட்ட பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு, பிப்ரவரி 10, 14, 18 ஆகிய தேதிகளிலும், 2013-ஆம் ஆண்டு, ஜனவரி 24, 26, 28 ஆகிய தேதிகளிலும் ரிக்டர் அளவுகோலில் 2.1, 2.4, 2.6, 2.8 நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கேரளா அரசு கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி பாலக்காடு மாவட்டத்தை நிலநடுக்கம் தாக்கும் என்று அறிவித்தது.

இதன் தற்காப்பு நடவடிக்கையாக கொழிஞ்சாம்பாறை, ஒழலப்பதி, முதலமடை, கொல்லங்கோடு, மலம்புழா, பல்லசேனா உள்பட பாலக்காடு மாவட்டத்தின் 15 கிராம நிர்வாக அலுவலகங்களில் நிலநடுக்க முன்னறிவுப்புக் கருவிகளைப் பொருத்தி வைத்துள்ளது. மேலும், இந்தப் பகுதி கோவை மாவட்டத்துக்கு மிகவும் நெருங்கிய பகுதிகளாக உள்ளதால் கோவையிலும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top