நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தொடக்கூடும்: நேபாள பிரதமர் தகவல்!

Sushil-Koiralaநேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தொடக்கூடும் என அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா அச்சம் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தை கடந்த சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளும், கட்டடங்களும், பாரம்பரிய நினைவுச் சின்னங்களும் தரைமட்டமாகி விட்டன. இந்த கோர நிலநடுக்கத்துக்கு இதுவரை 4,000 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக நேபாள போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 8,000 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து அச்சத்துடன் வெட்டவெளிகளில் தங்கியுள்ளனர். நேபாளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதியைச் சென்றடைந்த மீட்புப்படையினர் இடிபாடுகள் அகறும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சாலைகளும், ரயில் பாதைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் திண்டாடி வருகின்றனர். ஏராளமான மின்கம்பங்கள் அடியோடு பெயர்ந்து விழுந்துள்ளன. மின்சாரம் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் தவிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலை போல் குவிந்து கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையே யாராவது சிக்கியிருக்கிறார்களா? என்று கண்டறிவதற்காக மோப்ப நாய்கள் மற்றும் பிரம்மாண்ட சாதனங்களின் உதவியுடன் பன்னாட்டு மீட்புப்படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தின் சீதாபைரலா, மஹராஜ்கஞ்ச், மகேஸ்வரி, கங்கா பஜத் ஆகிய பகுதிகளில் இந்தியாவைச் சேர்ந்த தேசியப் பேரிடர் மீட்புப்படையின் 10 குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் பற்றி நேபாள உள்துறையின் தேசியப் பேரிடர் மேலாண்மைப் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ”நிலநடுக்கத்தால் 6,930-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்; அதிகபட்சமாக காத்மாண்டு பள்ளத்தாக்கில் மட்டும் 1,053 பேர் உயிரிழந்துள்ளனர். சிந்துபால் சௌக் பகுதியில் 875 பேர் இறந்துள்ளனர்” என்றனர். நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் உடல்கள், பாக்மதி நதியின் கரைகளிலும், மணல் திட்டுகளிலும் நேற்று ஒட்டு மொத்தமாக தகனம் செய்யப்பட்டன.

இந்நிலையில் நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தொடக்கூடும் என நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா அச்சம் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள அவர், கூடாரங்கள் மற்றும் மருந்து பொருட்களை அதிக அளவில் கொடுத்து உதவுமாறு உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

“அரசாங்கம் தன்னால் முடிந்த அளவு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. நேபாளத்திற்கு இது ஒரு சவாலான மற்றும் மிக கடினமான தருணமாகும்” என்றும் அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top