ஐபிஎல் போட்டியில் மும்பை, சென்னை அணிகள் வெற்றி!

nehra_bcci260415ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

நேற்றைய முதல் போட்டியில் மும்பை- சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

சிம்மன் (51), பட்டேல் (17), ரோகித் சர்மா (24), பொல்லார்டு (33) ஆகியோர் ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும், ஸ்டெய்ன், பிரவீண் குமார் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணயின் தவான், வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தனர். அதன்பின் ஒருபுறம் தவான் அதிரடி காட்ட வார்னர் நிதானமாக விளையாடினார். 4-வது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். இந்த ஓவரில் தவான் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசினார்.

அடுத்த ஓவரில் வார்னர் 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து நமன் ஓஜா களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி வந்த தவான் 6-வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார். அவர் 29 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். நமன் ஓஜா 9 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

ஒஜா அவுட் ஆன பிறகு ஐதாராபத் அணி 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு போபரா, லோகுஷ் ராகுல் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இதனால் சன்ரைசர்ஸ் அணி 14.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது. அந்த அணி மேலும் 4 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் 25 ரன்னில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய போபரா 23 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

19-வது ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விஹாரி அவுட் ஆனார். 3-வது பந்தில் பிரவீண் குமாரும், 4-வது பந்தில் ஸ்டெய்னும் அவுட் ஆனார்கள். இந்த ஓவரில் மலிங்கா ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

இதனால் கடைசி ஓவரில் ஐதராபாத் அணிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், வினய் குமார் அந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4-ஓவர் வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்திய மலிங்கா ஆட்ட நாயகன் விருது பெற்றார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மெக்கிளெனகன் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் மட்டும் வேகப்பந்து வீச்சாளர்கள் 14 விக்கெட்டுக்கள் வீழ்த்திய குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது ஆட்டத்தில் சென்னை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் பஞ்சாப் அணி வெறும் 95 ரன்களுக்கு சுருண்டது.

நேற்று சென்னை அணி பஞ்சாப் உடன் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற தோனி பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக மெக்கல்லம்- சுமித் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் கரண்வீர் சிங் வீசினார். முதல் பந்தை சுமித் பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை தொடங்கினார்.

சந்தீப் சர்மா வீசிய 2-வது ஓவரில் மெக்கல்லம் இரண்டு பவுண்டரி அடித்தார். 3-வது ஓவரை கரண்வீர் சிங் வீசினார். இந்த ஓவரில் சுமித் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரியுடன் 22 ரன்கள் குவித்தார். சந்தீப் சிங் வீசிய 4-வது ஓவரில் மெக்கல்லம் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்தார். இதனால் சென்னை அணி முதல் 4 ஓவரில் 47 ரன்கள் குவித்தது.

5-வது ஓவரை அனுரீத் சிங் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மெக்கல்லம் கொடுத்த எளிதான கேட்சை மிட்செல் ஜான்சன் பிடிக்க தவறினார். ஆனால் இந்த ஓவரின் 4-வது பந்தில் சுமித்த க்ளீன் போல்டாகி வெளியேறினார். அவர் 13 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்தார். அடுத்து ரெய்னா களம் இறங்கினார்.

8-வது ஓவரின் முதல் பந்தை ரெய்னா சந்தித்தார். சந்தீப் சர்மா வீசிய இந்த பந்து பேட்டில் பட்டு கீப்பரிடம் சென்றது. ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ரெய்னா 8 ரன்னில் இருந்து தப்பித்தார்.

ஜான்சன் வீசிய 10-வது ஓவரில் மெக்கல்லம் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து 50 ரன்னைத் தொட்டார். அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த மெக்கல்லம் 13-வது ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆனார். அவர் 44 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 66 ரன்கள் எடுத்தார்.

அடுத்து தோனி களம் இறங்கினார். ரெய்னா 16-வது ஓவரின் 2-வது பந்தில் ரன் அவுட் ஆனார். அடுத்து ஜடேஜா களம் இறங்கினார். தோனி அதிரடி காட்டி சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. தோனி 27 பந்தில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 41 ரன்களும், ஜடேஜா 18 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

193 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சையாக இருந்தது. ஈஸ்வர் பாண்டே வீசிய முதல் ஒவரிலேயே அதிரடி மன்னன் சேவாக் அவுட் ஆனார். போன ஆட்டத்தில் சிறப்பாக ஆடி அந்த அணிக்கு வெற்றியை தேடி தந்த ஷான் மார்ஷ் 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். முரளி விஜய் மட்டும் ஒரு முனையில் நின்று போராட மறுமுனையில் விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தது. 10-வது ஒவரில் 34 ரன் எடுத்திருந்த முரளி விஜய் அவுட்டாக பஞ்சாப்பின் தோல்வி உறுதியானது. இறுதியில் 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களை மட்டுமே எடுத்தது பஞ்சாப். இதனால் சென்னை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகப்பட்சமாக 3 விக்கெட்களும், அஸ்வின் 2, நெக்ரா 2, ஈஸ்வர் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் விழ்த்தினார்கள். ஆட்டநாயகனாக 66 ரன்கள் குவித்த மெக்கல்லம் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது சென்னை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top