பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

engg_jpg_1415073fதமிழகத்தில் பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை, அரசு இடஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு கல்லூரியில் உள்ள இடங்களில் 65 சதவீதத்தை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் (அரசு ஒதுக்கீட்டுக்கு) கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீத இடங்களைத் தான் அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும்.

பொதுவான கல்லூரிகள் வைத்துக்கொள்ளும் இடங்கள் 35 சதவீதமாகும். அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கையை அந்தந்த கல்லூரிகளே நிரப்பிக்கொள்ளலாம். அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் மாணவர் சேர்க்கை தான் பெரிய அளவிலானதாகும். அவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வருகின்ற மே மாதம் 6 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவங்கள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் உள்பட 60 மையங்களில் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பங்கள். அண்ணா பல்கலைக் கழகத்தில் மட்டும் மே மாதம் 29 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. அண்ணா பல்கலைக் கழகம் தவிர மற்ற 59 மையங்களில் விண்ணப்ப படிவம் மே மாதம் 27 ஆம் தேதி வரை வினியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்க அண்ணா பல்கலைக் கழகம் உள்பட 60 மையங்களிலும் மே 29 தேதி தான் கடைசி நாள். இதற்காக அண்ணா பல்கலைக் கழகம் 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சடித்து உள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பத்தை https://www.annauniv.edu/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடத்தப்பட உள்ளது. விண்ணப்ப கட்டணம் ரூ.500 மட்டுமே. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் சாதி சான்றிதழ் ஜெராக்ஸ் கொடுத்தால் விண்ணப்ப கட்டணம் ரூ.250 மட்டுமே. இந்த வருடம் மாணவர் சேர்க்கைக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு 1 லட்சத்து 15 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மருத்துவ படிப்புக்களான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க, வருகின்ற மே 11 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பங்களை, சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மே 11 ஆம் தேதி முதல் பெறலாம்.

விண்ணப்ப விநியோகம் மே 28 ஆம் தேதி வரை நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மே 29 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்துசேர வேண்டும். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை ஜூன் 12 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top