கேரள அரசு சார்பில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு ‘அரிவராசனம்’ விருது!

hqdefaultதிரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கேரள அரசின் அரிவராசனம் விருது ஜூன் மாதம் சபரிமலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் விழாவில், அரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது குறித்து கேரள தேவசம் போர்டு துறை மந்திரி வி.எஸ்.சிவகுமார் கூறியதாவது:-

நீண்ட காலம் இசை உலகில் சிறந்த சேவையாற்றி வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிக அளவில் அய்யப்பன் பாடல்களை பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார். அய்யப்பனின் புகழ் பாடி உலகெங்கும் பரவச்செய்த அவருக்கு இந்த ஆண்டின் அரிவராசனம் விருது வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை சிறப்பு அதிகாரி கே.ஜெயக்குமார் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரை ஆய்வு செய்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை தேர்ந்தெடுத்தது.

வருகிற ஜூன் மாதம் சபரிமலை சாஸ்தா கலையரங்கில் நடைபெறும் விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அரிவராசனம் விருதும் ரூ.1 லட்சம் மற்றும் நற்சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு மந்திரி வி.எஸ்.சிவகுமார் கூறினார்.

பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் உள்பட பலருக்கு இந்த விருது கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top