தென் ஆப்பிரிக்காவில் குடியிருக்கும் வெளி நாட்டினருக்கு எதிராக கலவரம்: 6 பேர் பலி

7098ff18-a8a1-4145-89bd-4df168ca0bc5_S_secvpfதென் ஆப்பிரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினருக்கு எதிராக மூண்ட கலவரத்தில் 6 பேர் பலியாகினர்.

தென் ஆப்பிரிக்காவில் ஏராளமான வெளிநாட்டினர் குடியுரிமை பெற்று அங்கேயே நிரந்தரமாக தங்கியுள்ளனர். இதனால் தங்களது வேலை வாய்ப்பும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க மக்களில் சிலர் கருதுகின்றனர்.

எனவே, அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு எதிராகவும், அவர்கள் வெளியேற வலியுறுத்தியும் துறைமுக நகரமான டர்பனில் சில வாரங்களுக்கு முன்பு கலவரம் மூண்டது.

தற்போது அக்கலவரம் படிப்படியாக தலைநகர் ஜோகனஸ் பார்க் நகருக்கும் பரவியது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் இரவோடு இரவாக கடைகளை உடைத்து பொருட்களை கொள்ளையடித்தனர்.

வீடுகளில் புகுந்து பொருட்களை சூறையாடினர். ஜோகனஸ்பர்க்கை ஒட்டியுள்ள அலெக்சாண்ட்ரா டவுன் ஷிப்பில் வன்முறை தலை விரித்தாடுகிறது. ரோடுகளில் டயர்களை போட்டு கொளுத்தி போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியுள்ளனர்.

வன்முறையை ஒடுக்க போராட்டக்காரர்கள் மீது போலீசார் ரப்பர் குண்டுகளை வீசி விரட்டியடித்து வருகின்றனர். வன்முறை சம்பவத்துக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.

வெளிநாட்டினரை குறி வைத்து தாக்குதல் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தற்போது நிலைமை மோசமடைந்து வருவதை தொடர்ந்து அண்டை நாடுகளான ஜிம்பாப்வே, மாலவி, மொசாம்பியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஷுமா ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தோனேசியா செல்வதாக இருந்தார். தற்போது கலவரம் தீவிரம் அடைந்துள்ளதால் தனது இந்தோனேசிய பயணத்தை ரத்து செய்து விட்டார்.

தாக்குதலுக்கு அஞ்சி டர்பன் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை சந்திக்க அதிபர் ஷுமா திட்டமிட்டுள்ளார். மேலும் நாட்டு மக்கள் அமைதி காக்கும்படியும், தங்கள் நாட்டில் வாழும் மக்களை சகோதர, சகோதரிகளாக பாவித்து அன்பும், அமைதியையும் பேணி காக்கும் படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top