ஐபிஎல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை!

CSK-MI_2375696gஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை குறிவைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.

8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐதராபாத் சன் ரைசர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டோனி தலைமையிலான சென்னை அணி தனது முதல் இரு ஆட்டங்களில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளை சாய்த்தது. 5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு சென்னை அணி புத்துணர்ச்சியுடன் களம் இறங்க இருக்கிறது. அதிரடி சூரர்கள் வெய்ன் சுமித், பிரன்டன் மெக்கல்லம் ஆகியோரின் தொடக்கத்தைத் தான் சென்னை அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது. இவர்கள் வலுவான தொடக்கம் அமைத்து கொடுத்தால் சென்னை அணி பெரிய ஸ்கோரை குவித்து எதிரணியை மிரட்டலாம். முதல் இரு ஆட்டங்களில் 4 மற்றும் 14 ரன்களில் ஆட்டம் இழந்த ‘புதுமாப்பிள்ளை’ சுரேஷ் ரெய்னாவும் பார்முக்கு திரும்பினால் சென்னை அணி மேலும் வலுவடையும்.

அதே சமயம் தொடர்ச்சியான தோல்விகளால் மும்பை அணி வீரர்களின் தன்னம்பிக்கை குறைந்துள்ளதாக கேப்டன் ரோகித் சர்மாவும், தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங்கும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த தொடரில் வெற்றி கணக்கை தொடங்காத ஒரே அணி மும்பை தான். அந்த அணி இதுவரை கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வி கண்டுள்ளது.

திறமையான வீரர்கள் இருந்த போதிலும் ஒருங்கிணைந்து விளையாடாததே மும்பை அணியின் தோல்விக்கு காரணம். குறிப்பாக சாதுர்யமான தொடக்கம் இல்லாமல் தவிக்கிறது. இப்போது ஆரோன் பிஞ்சும் காயத்தால் விளையாட முடியாமல் போய் விட்டதால், அது அந்த அணிக்கு இன்னாரு பின்னடைவாகும். கேப்டன் ரோகித் சர்மா கூறும் போது, ‘போட்டிக்கு நாங்கள் தயாராகும் விதம் எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் எங்களது திட்டத்தை களத்தில் செம்மையாக செயல்படுத்த முடியவில்லை. கடந்த சீசனில் கூட இதே போன்று தான் தொடக்கத்தில் தோற்றோம். ஆனால் சரிவில் இருந்து மீண்டு விட்டோம்’ என்றார். பிஞ்சுக்கு பதிலாக லென்டில் சிமோன்ஸ் தொடக்க ஆட்டக்காரராக ஆடுவார் என்று தெரிகிறது. கழுத்து வலியால் அவதிப்பட்ட ஹர்பஜன்சிங் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களது சொந்த ஊரில் பலம் வாய்ந்த சென்னை அணியின் முன்னேற்றத்தை மும்பை அணியினர் தடுப்பார்களா? அல்லது முடங்கி போவார்களா? என்பதை இன்றிரவு பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 18 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் சுமித், சுரேஷ் ரெய்னா, பாப் டு பிளிஸ்சிஸ், டோனி (கேப்டன்), வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஆஷிஷ் நெஹரா, மொகித் ஷர்மா, ஈஸ்வர்பாண்டே அல்லது இர்பான் பதான்.

மும்பை: லென்டில் சிமோன்ஸ், பார்த்தீவ் பட்டேல், உன்முக் சந்த் அல்லது அம்பத்தி ராயுடு, ரோகித் சர்மா (கேப்டன்), கோரி ஆண்டர்சன், பொல்லார்ட், சுஜித், ஹர்பஜன்சிங், மலிங்கா, வினய்குமார், பிரக்யான் ஓஜா அல்லது பவான் சுயல்.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த மோதலை சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top