தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: வானிலை மையம் தகவல்!

சென்னை வானிலை - Regional_metrological_centre_chennaiலட்சத்தீவு கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் வறுத்து எடுத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது கோடை வெயிலில் தவித்த மக்களின் உடல் மற்றும் உள்ளத்தை குளிர்விக்கும் வகையில் உள்ளது. இந்த நிலையில், சென்னையிலும் நேற்று கோடை மழை பெய்து சென்னை மக்களின் வெப்பத்தையும் தணித்தது. மேலும், இன்று மழைக்கான வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து, சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

“லட்சத்தீவின் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சம் 24 டிகிரி வெப்பமும் நிலவும்” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் வருமாறு:-

திருப்பூர் மாவட்டம் தர்மபுரம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தலா 9 சென்டி மீட்டர் மழையும், காரைக்கால், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் தலா 7 சென்டி மீட்டர் மழையும், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 6 சென்டி மீட்டர் மழையும், பாம்பன், தொண்டி, அறந்தாங்கி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

ராமநாதபுரம், வேதாரண்யம், திருமயம், அதிராமபட்டினம், செங்கோட்டை, ஆகிய இடங்களில் தலா 4 சென்டி மீட்டர் மழையும், அறிமளம், திருபுவனம், புதுச்சேரி, தர்மபுரி, பரமத்திவேலூர், திருவாரூர், பெருந்துறை, நெல்லை மாவட்டம் பாபநாசம் ஆகிய மாவட்டங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பெய்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top