20 தமிழர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம்: மறு பிரேத பரிசோதனைக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு!

Tamils-encounterதிருப்பதி வன பகுதியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை செம்மரம் கடத்தியதாக கூறி 20 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை சுட்டுக் கொலை செய்தது.

இந்த சம்பவம் தமிழ் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 20 பேர் என்கவுண்டரில் கொல்லப்படவில்லை. திட்டமிட்டு பிடித்து வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு குரல் கிளம்பி உள்ளது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டத்தின் 302–வது பிரிவின் கீழ் இந்த கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் துப்பாக்கி சூடு நடத்திய சிறப்பு அதிரடிப்படை போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

திருப்பதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரின் உடல்களும் திருப்பதி மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் 14 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு விட்டன.

மீதம் உள்ள முனுசாமி, மூர்த்தி, மகேந்திரன், முருகன், சசிக்குமார், பெருமாள் ஆகிய 6 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் முனியம்மாள் என்பவர் ஒரு மனு செய்திருந்தார்.

அதில் அவர், ‘‘கொல்லப்பட்டவர்களின் உடல்களில் ஏராளமான காயங்கள் காணப்படுகின்றன. அவர்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்டுள்ளனர். எனவே மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

முனியம்மாள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. முனியம்மாள் நேரில் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களை விசாரித்த பிறகு நீதிபதி தீர்ப்பளித்தார்.

அவர், ‘‘திருப்பதி வனப்பகுதியில் சுடப்பட்டு இறந்த 20 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையை நாளை (வியாழக்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து அரசு வழக்கறிஞர் கூறுகையில், ‘‘20 பேர் கொலை தொடர்பாக ஆந்திர மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது’’ என்றார்.

உடனே நீதிபதிகள், ‘‘அந்த சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெறுபவர்களின் பெயர் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்’’ என்று உத்தரவிட்டனர்.

அதன்படி ஐதராபாத் ஐகோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் 20 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அரசு வழக்கறிஞர் கூறுகையில், ‘‘20 தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் 20–ந்தேதிதான் எங்களுக்கு கிடைக்கும். அதன் பிறகு பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்கிறோம்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவு ஒன்றை வெளியிட்டனர். 6 தமிழர்களின் உடல்கள் மீண்டும் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மனுதாரர் சில ஆவணங்களை தாக்கல் செய்த பிறகு இது தொடர்பாக முழு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top