இலங்கை அதிபரை தமிழகத்துக்கு அழைத்துப் பேச வேண்டும்: திருமாவளவன்

திருமாவளவன்தமிழக அரசே முன்முயற்சி எடுத்து இலங்கை அதிபரை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து மீனவப் பிரதிநிதிகளின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வதும், அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. நேற்று மீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 37 மீனவர்களையும் அவர்களது 5 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் வளைத்துப் பிடித்துச் சென்றுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். பிடித்துச்செல்லப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டுமென இலங்கை அரசை வலியுறுத்துகிறோம்.

மார்ச் மாத இறுதியில் இலங்கை-தமிழக மீனவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தமிழக மீனவர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளைப் பரிசீலித்து முடிவைத் தெரிவிப்பதாக இலங்கை மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதனிடையே, அண்மையில் இது குறித்துப் பேசிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தமிழக மீனவர்களைக் கைது செய்யவும், படகுகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். சுமூகமாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும்வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது. அதை இந்திய அரசு கண்டிக்கவோ, அதற்கு மறுப்புத் தெரிவிக்கவோ இல்லை. அதன் காரணமாகவே தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையின் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சினையை உடனடியாகத் தீர்த்து விடுவோம் என்று தேர்தல் நேரத்தில் வாய்ச்சவடால் பேசிய பாஜகவினர் இப்போது மவுனம் காப்பது ஏன் எனத் தெரியவில்லை.

மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழகத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருக்கிறேன் என இலங்கை அதிபர் கூறியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே, தமிழக அரசே முன்முயற்சி எடுத்து இலங்கை அதிபரை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து மீனவப் பிரதிநிதிகளின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கிருக்கும் ஆட்சியாளர்களும், கட்சிகளும் தமிழக மீனவர் பிரச்சினையில் ஆதாயம் தேட முனைந்துள்ளன. அதனால் தமிழக மீனவர்களின் துயரம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top