பப்புவா நியூகினியாவில் 7.7 ரிக்டரில் கடும் நிலநடுக்கம்: 17 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

earthquake-papua new guineaஆஸ்திரேலியா அருகே பசிபிக்கடலில் பப்புவா நியூகினியா என்ற தீவு நாடு உள்ளது. அங்கு இன்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்குப் பகுதியில் உள்ள கொகோபோ நகரம், தலைநகர் போர்ட் மோர்ஸ்பி உள்ளிட்ட பகுதிகள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கினர். அங்கு 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொகோபோ நகரில் இருந்து 50 கி.மீட்டருக்கு தென்கிழக்கில் பூமிக்கு அடியில் 65 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக கொகோபோ கடலில் வழக்கத்தை விட மிக உயரமான அலைகள் எழும்புகின்றன. அவை 3 முதல் 10 அடி உயரம் வரை எழுவதால் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் பசிபிக் நாடுகளான ரஷியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஹவாய் (அமெரிக்கா), மெக்சிகோ, கவுதமலா, கோஸ்டாரிகா, பனாமா, கொலம்பியா, ஈகுவேடார், பெரு, சிலி, அண்டார்டிகா ஆகிய 17 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட பப்புவா நியூகினியாவில் சேத விவரம், உயிர் சேதம் போன்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top