சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிப்பதில் மீண்டும் தாமதம்!

metro railசென்னை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் கோயம்பேடு–ஆலந்தூர் இடையே உள்ள 10 கிலோமீட்டர் தூர மேல்மட்ட வழித்தட பணிகள் முழுமையாக முடிந்து விட்டது. மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமும் முழுமை பெற்றுள்ளது.

இந்த வழித்தடத்தில் மின் இணைப்பு, சிக்னல், தகவல் தொடர்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. கோயம்பேடு–ஆலந்தூர் இடையே உள்ள ரயில் நிலைய பணிகளும் நிறைவு பெற்றுள்ளன.

இந்த வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு இந்த மாதம் 20–ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆய்வு முடிந்து சான்றிதழ் வழங்கப்பட்டவுடன் ஒரு வாரத்தில் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அடுத்த மாதம் மத்தியில் அல்லது இறுதியில் நடைபெறலாம் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றன.

இந்த மாதம் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடந்தால் அடுத்த மாதம் கோயம்பேடு–ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆய்வு முடிந்த 2 வாரத்துக்குள் ரயில் சேவை தொடங்குவதற்கான அனுமதி கிடைக்கும்.

அதன்பிறகு தமிழக அரசின் அனுமதி பெற்று மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா தேதி முடிவு செய்யப்படும். பாதுகாப்பு ஆணையர் ஆய்வு தள்ளிப்போவதால் கோயம்பேடு–ஆலந்தூர் இடையே தொடங்க இருந்த மெட்ரோ ரயில் சேவை தொடக்கமும் தள்ளிப்போகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top