கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் ஓட 2 வாரத்தில் அனுமதி: மேலும் 3 வழித்தடங்கள் ஆய்வு

metro railசென்னை மெட்ரோ ரெயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மொத்தம் 45.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சென்னை மெட்ரோ ரெயில் பாதை 2 வழித்தடங்களாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் வண்ணாரப்பேட்டை, விமான நிலைய பாதை 23.1 கிலோமீட்டர் தூரம் உடையது.

சென்டிரல் – கோயம்பேடு– பரங்கிமலை இடையே அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதையின் தூரம் 22 கி.மீ. இந்த 2 வழித்தடங்களிலும் சுரங்கம் மற்றும் மேல் மட்டபாதை வழியாக மெட்ரோரெயில் செல்லும். இவற்றில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை உள்ள 11 கி.மீ மேல்மட்ட மெட்ரோ ரெயில் பாதை பணிகள் முழுமையாக முடித்து விட்டது.

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. இங்கு அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. ரெயில் நிலையங்களில் பயணிகள் நுழையும் போது கண்காணிக்கும் சென்சார் கருவிகள், பயணச்சீட்டுக்கள் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் ஆகியவை அமைக்கும் பணியும் நிறைவடைந்து விட்டது.

இந்த வழித்தடத்தில் மின் இணைப்பு, சிக்னல்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டமும் முடிந்து விட்டது. விரைவில் இறுதி கட்ட ஆய்வு நடைபெற உள்ளது.

தற்போது, கோயம்பேட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரெயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மெட்ரோ ரெயில்களை இயக்கும் சோதனை நடந்து வருகிறது. ரெயில் நிலையங்கள் இந்த மாத இறுதிக்குள் முழுமையாக தயார் ஆகிவிடும்.

மெட்ரோ ரெயில்களை பயணிகளுக்காக இயக்குவதற்கு முன்பு பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும். அடுத்த வாரம் பாதுகாப்பு ஆணையர் தனது குழுவுடன் வந்து இறுதி கட்ட ஆய்வை நடத்துகிறார்.

4 நாட்கள் இந்த ஆய்வு நடைபெறும். அதன் பிறகு ஒருவாரத்துக்குள் மெட்ரோ ரெயில் ஓடுவதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 2 வாரத்துக்குள் இந்த அனுமதி வழங்கப்பட்டு விடும். அதன் பிறகு கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் இயங்குவதற்கான தேதிமுடிவு செய்யப்படும் என்று மெட்ரோ ரெயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மெட்ரோ ரெயில் தற்போது பணிகள் நடைபெறும் 2 வழித்தடங்கள் தவிர மேலும் 3 வழித்தடங்களுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 3 வழித்தடங்களும் 76 கி.மீ தூரம் கொண்டதாக அமையும்.

இதில் மாதவரம் முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரை 17 கி.மீ கோயம்பேடு– ஈஞ்சம் பாக்கம் 27 கி.மீ மாதவரம்– பெரும்பாக்கம் 32 கி.மீ. மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க ஆய்வு நடைபெற உள்ளது.

மாதவரம் – கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் மாதவரம் அயனாவரம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஜெமினி, ராதாகிருஷ்ணன் சாலை, லஸ், கலங்கரை விளக்கம் ரெயில் நிலையங்களை அமைக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு – ஈஞ்சம்பாக்கம் வழித்தடத்தில் சாலிகிராமம், கோசம்பாக்கம், பனகல்பூங்கா, நந்தனம், லஸ், மந்தைவெளி, அடையாறு பெசன்ட்நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் ரெயில் நிலையங்கள் அமையும்.

மாதவரம் – பெரும்பாக்கம் வழித்தடத்தில் கொளத்தூர், வில்லிவாக்கம், மேற்கு அண்ணாநகர், முகப்பேர், மதுரவாயல், வளசரவாக்கம், சென்னை, வர்த்தக மையம், ஓ.டி.ஏ., ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இது பற்றிய முதல்கட்ட விவர அறிக்கையை மத்திய, மாநில அரசுகளுக்கு மெட்ரோ ரெயில் நிர்வாகம் அளித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top