7 ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதித்தது வடகொரியா!

6dad3489-f3f8-4bd6-af84-cb719a794e81_S_secvpfதென்கொரியா-அமெரிக்கா கூட்டு போர் பயிற்சிக்கு எதிராக, வடகொரியா அதிரடியாக 7 ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதித்துள்ளது.

தென்கொரியாவும், அமெரிக்காவும் ஆண்டுதோறும் கொரிய தீபகற்ப பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. இதை விரும்பாத வடகொரியா, அதற்கு எதிராக எப்போதுமே குரல் கொடுத்து வந்துள்ளது.

இந்த ஆண்டில் தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தால், அணு ஆயுத சோதனைகளை நிறுத்திவைப்பதாக வடகொரியா அறிவித்தது. ஆனால் அதை தென் கொரியாவும், அமெரிக்காவும் ஏற்றுக்கொள்ளாமல் வழக்கம்போல போர் பயிற்சி நடத்தப்போவதாக அறிவித்தன.

இந்த போர் பயிற்சி கடந்த 2-ந் தேதி தொடங்கியது. நேற்று முடிந்தது. இருப்பினும் களப்பயிற்சி மட்டும் அடுத்த மாதம் 24-ந் தேதி வரை தொடரும்.

இந்த கூட்டு போர் பயிற்சியை, தன்னை ஆக்கிரமிப்பதற்காக தென்கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து நடத்துகிற ஒத்திகை என்றுதான் வடகொரியா கருதுகிறது. எனவே தான் இந்த ஆண்டு கூட்டு போர் பயிற்சி தொடங்கிய நாளிலேயே வடகொரியா ‘ஸ்கட்-சி’ வகை ஏவுகணைகள் இரண்டை அடுத்தடுத்து சோதித்து தென்கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

கூட்டு போர் பயிற்சி முடியும் நிலையில், வடகொரியா தனது எதிர்ப்பை மீண்டும் தக்க விதத்தில் பதிவு செய்ய முடிவு செய்தது. அந்த வகையில், தெற்கு ஹாம்க்யாங் மாகாணத்தில் சான்டாக் என்ற இடத்தில் கிழக்கு கடல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் அடுத்தடுத்து 7 ஏவுகணைகளை பரிசோதித்தது.

இந்த ஏவுகணைகள் சோதனை அனைத்தும் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஏவுகணைகள் அனைத்தும் தரையில் இருந்து புறப்பட்டு சென்று, தரையில் உள்ள இலக்கை தாக்கக்கூடியவை என தெரிய வந்துள்ளது.

மேலும், இவை அனைத்தும் எஸ்ஏ-2, எஸ்ஏ-3 மற்றும் எஸ்ஏ-5 வகையை சேர்ந்தவை என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் இது வடகொரியா நடத்தியுள்ள 5-வது ஏவுகணை சோதனை ஆகும்.

இந்த ஏவுகணை சோதனை குறித்து வடகொரியா ஊடகம் எதுவும் செய்தி வெளியிடவில்லை. இந்த ஏவுகணைகள் சோதனையால், கொரிய தீபகற்ப பகுதியில் நிலவிய பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top