நிலக்கரி சுரங்க வழக்கு: மன்மோகன்சிங்குக்கு காங்கிரஸ் முழு ஆதரவு

b3e36ae8-747d-4dfa-b180-6d64777e4a1e_S_secvpfநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. 2005–ம் ஆண்டு ஹிண்டல்கோ நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீது 3 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மன்மோகன்சிங் உள்பட 6 பேர் அடுத்த மாதம் (ஏப்ரல்) 8–ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ய கையெழுத்திட்டது தொடர்பாக அன்று மன்மோகன்சிங் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த மன்மோகன்சிங், ‘‘சட்ட விசாரணையை சந்திக்க நான் தயாராக உள்ளேன். நான் அப்பாவி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்’’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை தனிப்பட்ட முறையில் மன்மோகன்சிங்கை மட்டுமே கையாள விடாமல் காங்கிரஸ் கட்சி இதில் இணைந்து செயல்பட மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘நாங்கள் மன்மோகன்சிங்கை முழுமையாக ஆதரிக்கிறோம். சட்ட ரீதியாக நாங்கள் இந்த பிரச்சினையை எதிர் கொள்வோம்’’ என்றார்.

இதற்கிடையே இந்த பிரச்சினையில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்பதை உலகுக்கு காட்ட சோனியா முடிவு செய்தார். அவர் உத்தரவின் பேரில் காலை 10 மணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் அனைவரும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஒன்று திரண்டனர். இதையடுத்து சுமார் 100 மூத்த தலைவர்கள், எம்.பி.க்களுடன் சோனியா 1½ கி.மீ. தொலைவில் மோதிலால் மார்க்கில் உள்ள மன்மோகன்சிங் வீடு நோக்கி ஊர்வலமாக நடை பயணமாக புறப்பட்டார். ‘‘ஒற்றுமை பேரணி’’ என்று இந்த பேரணிக்கு பெயரிடப்பட்டது. இந்த பேரணியில் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, அனந்தசர்மா, மல்லிகார் ஜுன கார்கே, அம்பிகா சோனி, திக்விஜய்சிங் உள்பட மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

சோனியா தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் தன் வீட்டுக்கு நடந்து வருவதை அறிந்ததும் மன்மோகன்சிங் மகிழ்ச்சி அடைந்தார். அவர் தன் மனைவி குர்சரன்கவுருடன் வீட்டுக்கு வெளியில் வந்து சிரித்தப்படி வணங்கிக் கொண்டே சோனியா மற்றும் தலைவர்களை வரவேற்றார். பிறகு அனைவரையும் வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு சோனியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விவாதித்தனர். கூட்டம் முடிந்ததும் சோனியா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சட்ட ரீதியாக போராடும். இந்த விஷயத்தில் மன்மோகன்சிங்குக்கு பக்க பலமாக காங்கிரஸ் முழுமையாக அவருக்கு பின்னால் அணி வகுத்து நிற்கும்.

மன்மோகன்சிங் வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தினார். அவர் நேர்மையானவர். இந்த உலகுக்கு அவர் நேர்மையானவர் என்று நன்கு தெரியும். கோர்ட்டில் அவர்தான் நிரபராதி என்பதை நிரூபித்துக் காட்டுவார். எங்களுக்கு அந்த நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் மன்மோகன்சிங்குக்கு ஆதரவை தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

அதன்பிறகு சோனியாவும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் அக்பர் சாலையில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சோனியா தலைமை தாங்கினார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

மன்மோகன்சிங்குக்கு ஆதரவாக எந்தெந்த வக்கீல்களை வைத்து வாதாடுவது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இது தவிர மன்மோகன் சிங்குக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு இடைக்கால தடை வாங்குவது பற்றியும் பேசப்பட்டது. மன்மோகன் சிங் விரும்பினால் டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்து சம்மனுக்கு இடைக்ககால தடை வாங்க முடியும் என்று கூறப்படுகிறது.

மன்மோகன்சிங் மீது சுமார் 75 பக்கங்களில் குற்றம் சுமத்தி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை சட்ட ரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெற சட்ட நிபுணர்களிடம் கருத்துகள் கேட்கவும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனக்கு சிறப்பு நீதிமன்றம் அனுப்பியுள்ள சம்மனை எதிர்த்து ‘‘அப்பீல்’’ செய்ய முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து இன்று அவர் சட்ட நிபுணர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தினார். எனவே கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மன்மோகன் சிங் விரைவில் அப்பீல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top