கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மோடி அரசு செயல்படுகிறது: வைகோ குற்றச்சாட்டு!

Vaikoமோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக செயல்படுகிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டி உள்ளார்.

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்ட மசோதா, விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் வகையில் உள்ளது என்று அண்ணா ஹசாரே, மேதா பட்கர் ஆகியோர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் நேற்று கலந்து கொண்டனர்.

அப்போது போராட்டத்தில் வைகோ பேசும்போது, ”ஏழை விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு “நிலம் கையகப்படுத்துதல்’ தொடர்பான அவசரச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரு முதலாளிகளுக்கு உதவும் நோக்குடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன், “மக்களால், மக்களுக்காக, மக்களே ஆட்சி செய்வதுதான் அரசு’ எனக் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது.

இந்தச் சட்டத்தை நிறைவேற்றி ஏழை விவசாயிகளின் நிலங்களைக் கொள்ளையடிக்கும் முயற்சியில் அரசு ஈடுபடத் திட்டமிடுகிறது. விவசாயிகளின் ஒப்புதலின்றி விவசாய நிலத்தை கையகப்படுத்தலாம் என்ற மோடி அரசின் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அவசர சட்ட மசோதாவை மத்திய அரசு குப்பையில் எறியவில்லை என்றால் மோடி அரசை, மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top