உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி 364 ரன்கள் குவிப்பு!

sharma_ap_mஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகிற 14–ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பு அனைத்து அணிகளும் 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது. நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று முன்தினம் நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 106 ரன்னில் தோற்றது.

ஆஸ்திரேலியாவில் இன்னும் ஒரு வெற்றியை பெற இயலாமல் மிகுந்த நெருக்கடியில் இருக்கும் இந்திய அணி 2–வது பயிற்சி ஆட்டத்தில் இன்று புதுமுக அணியான ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

இந்திய அணி கேப்டன் டோனி ‘டாஸ்’ வென்று தனது அணி முதல் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். முதல் பயிற்சி ஆட்டத்தில் நன்றாக ஆடிய தவான் இன்று சொதப்பினார். ஆட்டத்தின் 3–வது ஓவரில் ஹமித் ஹசன் பந்தில் போல்டு ஆனார். அவர் 4 ரன்களே எடுத்தார். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த முறையும் மோசமாக விளையாடினார். 5 ரன்னில் தவ்லத் பந்தில் வெளியேறினார்.

4 ஓவரில் 16 ரன்னில் இந்தியா 2 விக்கெட்டை இழந்தது. இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் ஆடிய ரோகித் சர்மா 49 பந்தில் 50 ரன்னை தொட்டார். இதில் 6 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும். 18–வது ஓவரில் இந்திய அணி 100 ரன்னை தொட்டது.

அதன் பின் இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் 75 ரன்(71 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்திருந்த போது ரெய்னா துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். 3–வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 158 ரன் எடுத்தது. அடுத்து ரகானே களமிறங்கினார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரோகித் சதம் அடித்து அசத்தினார். பலவீனமான ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை திணறடித்து ரன்களை சேர்த்தார். 150 ரன்களை குவித்து அவர் ஆட்டம் இழந்தார். 122 பந்துகளில் 12 பவுண்டரி, 7 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 269 ஆக (39.5 ஓவர்) இருந்தது. அடுத்து கேப்டன் டோனி களம் வந்தார். ஆனால் சிறிது நேரத்தில் 10 ரன்களுக்கு தனது விக்கெட்டை தோனி பறிகொடுத்தார். அதே சமயம் ரோகித்தின் பாணியில் அதிரடியாக விளையாடிய ரகானே இறுதி வரை ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 88 ரன்கள் குவித்து அசத்தினார். ஜடேஜா தன் பங்குக்கு 10 பந்துகளில் 11 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணி சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. எனினும் இன்றைய போட்டியில் எதிர்த்து விளையாடியது பலவீனமான ஆப்கன் அணி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top