அம்மா திரையரங்கத்தை அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் நிறுவ வேண்டும்: இயக்குநர் சேரன்

சேரன்புதிதாக செயல்பட உள்ள ‘அம்மா திரையரங்கம்’ திட்டமானது சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து நகரம் மற்றும் கிராமங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என இயக்குனர் சேரன் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

‘அம்மா திரையரங்கம்’ திட்டம் கொண்டுவந்ததின் மூலமாக திரையுலகில் வாழ்க்கை இழந்து, எப்படி இனி திரைப்படம் எடுத்து வாழப்போகிறோம், என தவித்து நின்ற ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் இதயங்களிலும், கண்களில் ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு இயக்குனராகவே வாழ்ந்து மடிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட என் போன்ற ஆயிரக்கணக்கான இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் இதயங்களில் என்றும் மறக்காத, மறக்க நினைக்காத வண்ணம் நீங்கள் குடிகொண்டு விட்டீர்கள். 

இந்த திட்டம் சென்னை நகரம் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் நிறுவப்பட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.இந்த திட்டத்தின் மூலமாக தமிழகத்திலிருந்து திருட்டு விசிடியை கட்டுப்படுத்தி, எல்லா தயாரிப்பாளர்கள் குடும்பங்களிலும் விளக்கேற்ற முடியும்.

குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்கள் எல்லா திரைப்படங்களையும் பார்க்கவும், உழைத்து களைத்த மக்கள் பொழுதுபோக்கிற்காக குடும்பங்களுடன் திரையரங்கம் சென்று திரைப்படம் காணவும் நிச்சயம் வழி செய்யும்.இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பயன்பெறுவதோடு அல்லாமல் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவும் வழி செய்யும். 

இந்த திட்டம் நிறைவேற நீங்கள் இடும் கட்டளைகளை செவ்வனே நேர்மையான வழியில் செய்து முடிக்க நான் என்றும் உங்கள் பின்னால் பணிவோடு நிற்க தயார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top