சமஸ்கிருத திணிப்பு மீண்டும் ஒரு மொழிப்போருக்கு வழிவகுக்கும்: கி.வீரமணி

04FL_DK_VEERAMANI__1587344gதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியரசு தினவிழாவையொட்டி மத்திய அரசின் தகவல் விளம்பர பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் சமதர்மம் மற்றும் மதச்சார்பற்றத்தன்மை ஆகியவை விடுபட்டு உள்ளது. இது பெரிய தவறு ஒன்றும் இல்லையே என்றும், அவைகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடையில்தான் சேர்க்கப்பட்டது என்றும் மத்திய சட்ட மந்திரி தெரிவித்து உள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 42-வது திருத்த சட்டத்தின்படி சேர்க்கப்பட்டதை யாரும் திருத்தவே முடியாது என்று 3 முறை தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இதுகூட ஒரு சட்டமந்திரிக்கு தெரியவில்லை. இது கண்டிக்கத்தக்கது. மத்திய மந்திரிகள் ஒவ்வொருவரும் மதவாதம் தொடர்பாக தனித்தனியான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

ஆனால் பிரதமர் நரேந்திரமோடி மட்டும் மவுனம் சாதித்து வருகிறார். ‘சாகாக்கள்’ என்ற ஒரு அணிவகுப்பை நடத்தக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் ஒருசில இடங்களில் அணிவகுப்பு பயிற்சியை இந்து அமைப்புகள் நடத்தி வருகின்றன. அது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.

இலங்கை அகதிகளை மத்திய அரசு திரும்பி அனுப்பும் முயற்சியை எடுத்து உள்ளது. இலங்கையில் சுமுக நிலை ஏற்படும் வரை தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளை திரும்பி அனுப்பக்கூடாது. மேலும் அரசு அதிகாரிகள் மதபிரசாரம் செய்யக்கூடாது. அவர்கள் மாலை போடுவது, அலுவலகங்களில் பூஜைகள் செய்வது போன்றவற்றையும் கைவிட வேண்டும்.

சங்பரிவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்து சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதை உடனடியாக கைவிட வேண்டும். இல்லை என்றால் மீண்டும் ஒரு மொழி போர் ஏற்பட வழிவகை செய்யும். கோட்சேவுக்கு சிலை வைத்தால் அது நாட்டுக்கே ஆபத்து.

மத்திய அரசின் இதுபோன்ற விரோத போக்கை கண்டித்து தமிழகத்தில் 2 ஆயிரம் விழிப்புணர்வு மாநாடு நடத்த முடிவு செய்து உள்ளோம். இந்து அமைப்புகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருவதையும், சமஸ்கிருத திணிப்பை எதிர்த்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மக்களிடம் எடுத்து கூறுவோம்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு எங்கள் ஆதரவை ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். ஆளும் கட்சியினரின் ஆதிக்கம், பணநாயகம் நிலவி வருவதால் பிரசாரம் செய்ய அங்கு செல்லவில்லை.

இவ்வாறு கி.வீரமணி கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top