முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க ராமதாஸ் கோரிக்கை!

ராமதாஸ்ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து முடிவெடுத்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழகத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களால் பல முக்கியப் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. ராஜீவ் கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்த வழக்கு அவற்றில் முக்கியமானது.

ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு மே – ஜூன் மாதங்களில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறைகளில் அடைக்கப்பட்டு இன்னும் சில மாதங்களில் 25 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.

இவர்களில் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் தூக்குத் தண்டனை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள மூவரின் தூக்கு தண்டனையும் கடந்த ஆண்டு பிப்ரவரி  18-ஆம் தேதி குறைக்கப்பட்டது. இவர்கள் 14 ஆண்டு சிறை தண்டனைக் காலத்தை ஏற்கனவே நிறைவுசெய்து விட்ட நிலையில், அரசுகள் விரும்பினால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 432, 433 ஆகியவற்றின்படி இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதன்படி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும், ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த தடையால்  7 தமிழர்களும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

இவர்களின் விடுதலை குறித்து அரசியல் சட்ட அமர்வு தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், இதற்கான விசாரணையை அடுத்த 3 மாதங்களில்  அரசியல் சட்ட அமர்வு தொடங்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதனடிப்படையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வு, கடந்த ஜூலை 9 ஆம் தேதி கூடி, இந்த பிரச்சினையில் அனைத்து மாநில அரசுகளும் தங்களது நிலைப்பாட்டை ஜூலை 18-ஆம் தேதிக்குள் பதில் மனுவாக  தாக்கல் செய்ய வேண்டும்; அதைத் தொடர்ந்து ஜூலை 22 ஆம் தேதி விசாரணை தொடங்கும் என்றும் அறிவித்தது.

ஆனால், அறிவித்தவாறு ஜூலை 22 ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வரவில்லை. அதன்பின் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த வழக்கை விசாரித்த அரசியல் சட்ட அமர்வின் தலைவரான தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அதற்கு பதிலாக புதிய அமர்வு இன்னும் அமைக்கப்படவில்லை. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் விடுதலை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு அடுத்த மாதம் 19 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையப் போகிறது.

7 தமிழர்களும் சுமார் 25 ஆண்டுகளாக சிறைவாழ்க்கையை அனுபவித்து வரும் நிலையில், அவர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? என்பதை தீர்மானிப்பதில் ஏற்பட்ட தாமதம்  காரணமாக அவர்களை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது முறையல்ல; இது மிகப்பெரிய மனித உரிமை மீறல்.

7 தமிழர்களையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில், இவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் இதற்கான வேண்டுகோளை முன்வைத்தாலே, கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விடும். ஆனால், இதற்கான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்க வில்லை.

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வழக்கிலும் இதேபோன்ற அலட்சியமான அணுகுமுறையை தமிழக அரசு கடைபிடித்ததால் தான் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை நடப்பாண்டில் நடத்த முடியவில்லை. தமிழர்களையும், தமிழர்களின் பண்பாட்டையும் பாதுகாப்பதில் தமிழக அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதற்கு இந்த இரு பிரச்சினைகளை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

இந்தப் பிரச்னையில் இனியும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி, 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

சுமார் 25 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாழும் அவர்களை விடுவித்து இயல்பான வாழ்க்கையை வாழ தமிழக அரசு வகை செய்ய வேண்டும் ” என்று அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top