நிலக்கரி சுரங்க முறைகேடு: மன்மோகன் சிங் வாக்குமூலம் நீதிமன்றத்தில் தாக்கல்!

manmohan singhநிலக்கரி சுரங்க முறைகேடு குறித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாக்குமூலம் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சில ஆண்டுகள் நிலக்கரி துறையையும் கூடுதலாக கவனித்து வந்தார். அப்போது, 2005 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் தாலபிரா-2 என்ற நிலக்கரி சுரங்கம், ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா, அடுத்தடுத்து இரண்டு தடவை பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதிய பிறகு, இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த குற்றச்செயலும் நடக்கவில்லை என்று சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையை சி.பி.ஐ. நீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும், மன்மோகன் சிங்கிடமும், அப்போதைய பிரதமர் அலுவலக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 16 ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. குமார் மங்கலம் பிர்லா கடிதம் எழுதிய பிறகு பிரதமர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு மன்மோகன்சிங், ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை, சாதகமாகவும் செயல்படவில்லை என்றும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைப்படிதான் தலபிரா-2 சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டது நடைபெற்றதாகவும் கூறியதாக தெரிகிறது.

இதுபோல், மன்மோகன்சிங்கிடம் முதன்மை செயலாளராக இருந்த டி.கே.ஏ.நாயர், தனிச்செயலாளராக இருந்த பி.வி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோரிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

இந்நிலையில், சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி பாரத் பரஷார் முன்னிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை நிலவர அறிக்கையை சி.பி.ஐ. வழக்கறிஞர், மூடி ‘சீல்’ வைத்த உறைக்குள் வைத்து தாக்கல் செய்தார். அதில், மன்மோகன்சிங், நாயர், சுப்பிரமணியம் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களும் இடம்பெற்று இருந்தன.

அந்த அறிக்கையை நீதிபதி பரத் பரசர் படித்துப் பார்த்தார். மேலும், விசாரணையின் போது வாதிட்ட அரசு வழக்கறிஞர் வி.கே சர்மா, ‘‘இந்த வழக்கில் மேல் விசாரணை முடியும் வரை, தற்போது தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலங்களை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து பாதுகாக்க வேண்டும். ஆய்வுக்கு அனுப்ப வேண்டாம்’’ என வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வாக்குமூலத்தை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து பாதுகாக்கும்படி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்த மாதம் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top