உக்ரைனில் தீவிரமடையும் அரசு எதிர்ப்புப் போராட்டம்: 25 பேர் உயிரிழப்பு!

Ukraine Protest உக்ரைனில் மூன்று மாதங்களாக நீடித்து வரும் அரசுக்கு எதிரான போராட்டம் நேற்று(புதன்கிழமை) தீவிரமடைந்தது. அப்போது, போலீஸாருக்கும் எதிர்க் கட்சியினருக்குமிடையே நிகழ்ந்த மோதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்துவரும் அதிபர் விக்டர் யானுகோவிச் பதவி விலகக் கோரியும், அந்நாடு ஐரோப்பிய யூனியனுடன் இணைய வேண்டும் என வலியுறுத்தியும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக தலைநகர் கீவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரச் சதுக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விடாலி கிளிட்ஷுகோ தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் மூன்று மாதங்களாக போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் பணியில் ஆயிரக்கணக்கான கலவரத்தடுப்பு போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இருதரப்பினருக்கும் இடையில் நேற்று நிகழ்ந்த மோதலில் போலீஸார் உள்பட 25 பேர் உயிரிழந்ததாகவும், 241-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, போராட்டக்காரர்கள் வரம்பு மீறி செயல்படுவதாக அதிபர் விக்டர் யானுகோவிச் கண்டனம் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் அவர் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனநாயகத்தின் மாண்பைக் குலைத்து வருகிறார்கள்.
ஜனநாயகத்தில் ஆட்சி மாற்றம் என்பது தேர்தலின் மூலமாகத்தான் முடிவு செய்யப்பட வேண்டுமே ஒழிய, சாலைப் போராட்டங்கள் மூலம் அல்ல” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையால் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சுமார் 10,000 போராட்டக்காரர்கள் சுதந்திரச் சதுக்கத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அங்கு கடும் பதற்றம் நிலவி வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top