இந்தி மொழி திணிப்பு: நரேந்திர மோடிக்கு கருணாநிதி கேள்வி

modi with karunanidhiஇந்தி திணிப்பு தொடர்பாக, முன்னாள் பிரதமர்கள் அளித்த உறுதிமொழியை பிரதமர் நரேந்திரமோடி காப்பாற்றுவாரா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் – வீரவணக்க நாள் – அந்த நாளை, தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து வருகிறோம். அந்த நாளில் தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலும், கழகப் பேச்சாளர்கள் கலந்து கொண்டு, மொழிப்போரிலே கழகம் ஈடுபட்ட வரலாற்றை நினைவுபடுத்தி வருகிறார்கள். அதுபோல இந்த ஆண்டும் தமிழகம் முழுவதிலும் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

1965-ம் ஆண்டு கழகம் நடத்திய அந்த மொழிப் போரின் ஐம்பதாம் ஆண்டு நிறைவுதான் 2015. அதாவது மொழிப்போர் வரலாற்றின் பொன் விழா. ஆனால் அதற்கு முன்பே 1937-38-ம் ஆண்டிலேயே மொழிப்போர் என்பது தொடங்கிவிட்டது. அப்போது எனக்கு வயது பதினான்குதான். திருவாரூர் உயர்நிலைப் பள்ளியிலே நான் மாணவன். அப்போதிருந்த ஆட்சியாளர்கள் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயப் பாடம், இந்தி படித்து அதில் போதிய மதிப்பெண் பெற்றால்தான் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியும் என்று ஓர் ஆணையைப் பிறப்பித்தபோது, அதனை எதிர்த்து தமிழகமே போர்க்கோலம் பூண்டது. அப்போது பள்ளி மாணவனாக இருந்த நான், கையிலே ஒரு பதாகையை ஏந்திக் கொண்டு புறப்பட்டுவிட்டேன். அந்த நாளே, என்னை அரசியலில், பொது வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கச் செய்த நாள். என்னையும் ஒரு கவிஞனாக்கிய நாளும் அந்த நாள்தான். 1938-ல் தொடங்கிய எனது அரசியல் பயணம், இதோ 92 வயதிலும் தொடருகிறது – அதே உணர்வுகளோடு இது மேலும் தொடரும்.

நம்முடைய போராட்டத்தின் விளைவாகத் தான் இந்திய பாராளுமன்றத்தில் பிரதமர்கள் எல்லாம் நமக்கு வாக்குறுதி அளித்தார்கள். 1959-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ம் நாள் பண்டித நேரு கூறும்போது, “(இந்தி) திணிப்பு கூடவே கூடாது. இரண்டாவதாக, காலவரம்பற்ற நீண்ட காலத்திற்கு – அது எவ்வளவு காலம் என்பது எனக்குத் தெரியாது – ஆங்கிலத்தை கூட்டு ஆட்சி மொழியாக நீடிக்க விரும்புகிறேன். மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலத்தை நீடிக்க வைப்பேன். ஆங்கிலம் இனி நீடிக்கக்கூடாது என்கிற முடிவினை நான் இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். அதை முடிவு செய்ய வேண்டியது இந்தி பேசாத மக்களே” என்றார்.

மீண்டும் நேரு 1963-ம் ஆண்டும் பாராளுமன்றத்திலே இந்தி பேசாத மக்களின் பூரண சம்மதத்தைப் பெறுகிற வரையில் ஆங்கிலம் அல்லது இந்தி நிலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படக்கூடாது என்றார். இதே உறுதி மொழிகளைத் தான் 1965-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதியன்று பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும், அதன் பின்னர் இந்திரா காந்தியும் தெரிவித்தார்கள்.

ஆனால் அந்த 3 பிரதமர்களும் இந்தி பேசாத மக்களுக்கு அளித்த உறுதிமொழியை இன்றைய பிரதமர் நரேந்திரமோடி காப்பாற்றுவாரா? அல்லது இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பைக் கொண்டு வர முனையும் சிலருடைய தூண்டுதலுக்கு இரையாகி விடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டு வரும் நேரத்திலேதான் இந்த ஆண்டு வீரவணக்க நாள் நடைபெறுகிறது. அந்த உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தும் நாளாக இந்த ஆண்டு அமைய வேண்டும் என்பதை தமிழ் மக்களிடையே விளக்கிக் கூறுவதைத் தான் நம்முடைய பேச்சாளர்கள் நாளைய கூட்டத்தில் முக்கியமாக வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முன்னாள் பிரதமர்களின் உறுதிமொழி, இந்நாள் பிரதமர் நரேந்திரமோடியால் காப்பாற்றப்படுமா?.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top