யிங்லக் ஷினவத்ரா அரசியலில் ஈடுபட 5 ஆண்டுகள் தடை!

yingluck shinawatraதாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசியலில் ஈடுபட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா (வயது 47). கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி பிரதமராக பதவி ஏற்றார். ஆனால் பதவி நீக்கப்பட்ட பிரதமரான தனது சகோதரர் தக்ஷின் ஷினவத்ராவின் பினாமியாக அவர் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் யிங்லக் ஷினவத்ராவுக்கு எதிராக பல மாதங்கள் போராட்டங்கள் நடந்தன. இதற்கிடையே, அவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் தாவில் பிளையன்ஸ்ரீயை பணியிடமாற்றம் செய்ததாக தாய்லாந்து அரசியல் சாசன கோர்ட்டில் எம்.பி.க்கள் வழக்கு தொடுத்தனர். அதில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி அவரது பதவி பறிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தாய்லாந்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவ தளபதி பிரயுத் சான் ஓச்சா பிரதமர் ஆனார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா, விவசாயிகளுக்கு அரிசிக்கு சந்தை விலையை விட கூடுதல் விலை கொடுத்து, அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக தாய்லாந்து பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக குற்ற விசாரணை நடந்தது. நேற்று முன்தினம் அவர் பாராளுமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். அரிசி திட்டம், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமாக அமைந்ததாக குறிப்பிட்டார்.

அதையடுத்து அவர் மீதான குற்ற விசாரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. ஓட்டெடுப்பில் 220 எம்.பி.க்களில் 190 பேர் யிங்லக் ஷினவத்ராவுக்கு எதிராக ஓட்டு போட்டனர். இதையடுத்து அவர் 5 ஆண்டு காலம் அரசியலில் ஈடுபடுவதற்கு அதிரடி தடை விதிக்கப்பட்டது.

தாய்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், ராணுவ ஆட்சியின் பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் தடை விதிக்கப்பட்டுள்ள யிங்லக் ஷினவத்ரா மீது தாய்லாந்து சுப்ரீம் கோர்ட்டில் குற்ற வழக்கு தொடரப்படும். இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top