திருக்குறளை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக சேர்க்க வேண்டும்: தருண்விஜய் எம்.பி.

19 - Honbl Member of Parliament Sri Tarun Vijay Addressing the Studentsதிருக்குறளை இந்தியாவிலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடமாக சேர்க்க வேண்டும் என தருண் விஜய் எம்.பி. கூறியுள்ளார்.

கடந்த 11ஆம் தேதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை திருவள்ளுவர் திருப்பயணத்தை துவங்கியுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய், தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் வீடு மற்றும் இல்லங்களுக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில், திருச்சி வந்த தருண் விஜய், வரகனேரியில் உள்ள தமிழ் அறிஞர் வ.வே.சுப்பிரமணிய ஐயரின் நினைவு இல்லத்துக்கு சென்றார். அங்குள்ள நூலகத்தில் சிறப்பு விருந்தினர் பதிவேட்டில் கையழுத்திட்ட அவர், தமிழ் அறிஞர் வ.வே.சுப்பிரமணிய ஐயர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, திருச்சி தேவர் ஹாலில் பேராசிரியர் சாமிநாதன் தலைமையில் தருண்விஜய் எம்பிக்கான பாராட்டு கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு திருச்சி சிவா எம்.பி. பேசுகையில், ”தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என பெரும் போராட்டம் நடைபெறுகிறது. உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக்க முடியவில்லை. அதேபோல், தமிழ் உள்பட இந்தியாவில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க என்ன திட்டம் உள்ளது என்று நான் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, அப்படி ஒரு திட்டம் இல்லை என்று கூறிவிட்டார்கள். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். திருவள்ளுவர் தினத்தை தேசிய நாளாக அறிவித்து அதை கொண்டாட வேண்டும். இவையெல்லாம் நிறைவேற தருண்விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அடுத்து ஏற்புறை ஆற்றிய தருண்விஜய், “தமிழகத்தில் தான் தேசியமயத்தை காண முடிகிறது. இங்குள்ள பல்வேறு இடங்களில் வடக்கே உள்ள தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்று உள்ளது. உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இதற்காக நான் போராடுவேன். தமிழுக்காக பாடுபடும் தலைவர்களை ஒருங்கிணைத்து அதன் வளர்ச்சிக்காக முன்னோக்கி செல்வேன். இதற்கு தமிழர்களாகிய உங்களின் ஆதரவும், ஆசியும் எனக்கு வேண்டும். நான் அரசியலில் இருக்கலாம், போகலாம். ஆனால் என்னுடைய தமிழுக்கான குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி எம்.பி. சிவாவுடன் இணைந்து போராடுவேன்.

அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பண்பாடு, மதச்சார்பின்மை, கலாச்சாரம் ஆகிய சட்ட வரைவுகளை திருக்குறள் கொண்டுள்ளது. திருக்குறளை இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் பாடமாக சேர்க்க வேண்டும். ஒரே தேசம் மற்றும் மதச்சார்பின்மையை நிலைநாட்டியது திருக்குறள் மட்டும்தான்” என்றார்.

முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்த தருண்விஜய் எம்.பி., ”தமிழகத்தின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து, பொதுமக்களின் கருத்தை கணக்கில் கொள்ள வேண்டும். அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுவது முக்கியம். ஜல்லிக்கட்டு போட்டி நடக்க வேண்டும் என தமிழக மக்கள், விவசாயிகள், இளைஞர் அனைவரும் விரும்புகின்றனர். அதையே நானும் விரும்புகிறேன்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top