இந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட் டிரா : தொடரை வென்றது நியூசிலாந்து!

இந்தியா-நியூசிலாந்துவெலிங்டனில் நடைபெற்ற இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதிய 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.

முன்னதாக நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 438 ரன் குவித்தது.246 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 4–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 571 ரன் குவித்து இருந்தது.

கேப்டன் மெக்குல்லம் 281 ரன்னும், நீசம் 67 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.இன்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள்.மேக்குல்லம் மிகவும் அபாரமாக விளையாடி முச்சதம் அடித்தார். 557 பந்துகளில் 32 பவுண்டரி, 4 சிக்சருடன் அவர் 300 ரன்னை தொட்டார்.

முச்சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் பெற்றார்.முன்னதாக ஜிம்மி நீசம் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 123 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 100 ரன்னை எட்டினார்.
302 ரன் குவித்து இருந்த போது மேக்குல்லம் ஜாகீர் கான் பந்தில் ஆட்டம் இழந்தார். 7–வது விக்கெட் ஜோடி 179 ரன் எடுத்தது. அடுத்து வந்த சவுத்தி 11 ரன்னில் வெளியேறினார்.

நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 680 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் இந்தியாவுக்கு 435 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.நீசம் 137 ரன்னும், வாக்னர் 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஜாகீர்கான் 5 விக்கெட் கைப்பற்றினார்.
நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணி தடுமாறியது. 54 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. முரளிவிஜய் (7), புஜாரா (17) சவுத்தி பந்திலும், தவான் (2 ரன்) போல்ட் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.

4–வது விக்கெட்டான வீராட் கோலி– ரோகித்சர்மா ஜோடி பொறுப்புடன் ஆடி விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தியது.குறிப்பாக வீராட் கோலி சிறப்பாக ஆடினார். அவர் 129 பந்துகளில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். அவருக்கு இது 6–வது செஞ்சூரியாகும். நியூசிலாந்துக்கு எதிராக 2–வது சதத்தை பதிவு செய்தார்.இந்திய அணி 52 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. இந்த டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது.

வீராட் கோலி 105 ரன்னும், ரோகித்சர்மா 31 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மேக்குல்லம் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.இந்த டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இந்திய அணி தொடரை 0–1 என்ற கணக்கில் இழந்தது.ஆக்லாந்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 40 ரன்னில் தோற்று இருந்தது.
ஏற்கனவே 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி 0–4 என்ற கணக்கில் இழந்து இருந்தது. நியூசிலாந்து பயணத்தில் இந்திய அணி ஒரு வெற்றியை கூட பெறவில்லை.

தொடர்ந்து இரண்டு வெளிநாட்டு பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்தது. சமீபத்தில் தென்ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top