சிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: திருமாவளவன்

திருமாவளவன்இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

கடலூரில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும்போது, ”முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிறகு, நாம் பொங்கல் கொண்டாடுவது இல்லை. யாருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதும் இல்லை. ஆனால், இந்த ஆண்டு இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்த பிறகு, பொங்கல் பண்டிகை வருவதால் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களும், சிங்களர்களும் சேர்ந்தே ராஜபக்சேவை தோற்கடித்து இருக்கிறார்கள். இது நாம் எதிர்பார்த்த மகிழ்ச்சிக்குரிய செய்தி. இது அவருக்கு முதல் கட்ட தண்டனை தான். அடுத்த கட்ட தண்டனை சட்ட வடிவில் காத்திருக்கிறது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரி பால சிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ஒரு பாம்பின் இரண்டு விஷபற்கள் போன்றவர்கள். அதனால், சிறிசேனாவால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடும் என்று நாங்கள் நம்பவில்லை.

இந்தியாவில் உள்ள அனைத்து ஆதிதிராவிட தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிக்கிறார்கள். அவரை ஆதரித்த ராம்விலாஸ் பஸ்வான் அமைச்சராகி விட்டார். மோடியை விடுதலை சிறுத்தைகள் மட்டும் தான் எதிர்க்கிறது. மதம் மாறுகிறவர்களை மீண்டும் இந்து மதத்துக்கு மாறும்படி வற்புறுத்துகிறார்கள். எந்த பாதிப்பு வந்தாலும், போர்க்குணம் கொண்டு அதை எதிர்த்து செயல்படுகிறவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top