ராணுவ புரட்சிக்கு முயற்சி: ராஜபக்சேவிடம் விசாரணை நடத்த முடிவு!

ராஜபக்சேராணுவ புரட்சி நடத்த ராஜபக்சே முயற்சித்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் 3வது முறையாக போட்டியிட்ட ராஜபக்சே தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று ராஜபக்சேவின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டினார். தேர்தல் முடிவுகள் சிறிசேனாவுக்கு சாதகமாக வரத் தொடங்கிய நிலையில், தோல்வியை ஜீரணிக்க முடியாத ராஜபக்சே, கடைசி நேரத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது அம்பலமாகியது.

தோல்வியை தழுவிய நிலையில் ராஜபக்சே, அதிபர் மாளிகையில் இருந்தவாறே இலங்கையில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த முயன்று இருக்கிறார். ஆனால், அதை இலங்கையின் அட்டர்னி ஜெனரல் ஏற்க மறுத்திருக்கிறார். ராணுவ அதிகாரிகளும் ராஜபக்சேவின் நெருக்கடி நிலை பிரகடன யோசனையை நிராகரித்துள்ளனர். இதேபோல், தலைமை தேர்தல் அலுவலகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய ராஜபக்சே எடுத்துக் கொண்ட இறுதிக்கட்ட முயற்சிக்கும் இடம் அளிக்கப்படவில்லை.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ராஜபக்சே கையாண்ட நடவடிக்கைகள், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரும் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ளவருமான ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தெரிய வந்திருக்கிறது. அவர் உடனே கொழும்பில் உள்ள அதிபர் மாளிகைக்கு சென்று மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து, தேர்தல் முடிவுகள் விஷயத்தில் நீங்கள் ஏதாவது விபரீத முடிவுகளை எடுத்தால் அதில் வேறு பெரிய நாடுகள் தலையிட நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார். இதன் பின்னரே பிரச்னை செய்யாமல் அமைதியாக ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளர் ரஜித சேனரத்னேவும் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் செய்தித் தொடர்பாளர் மங்கள சமரவீரா செய்தியாளர்களிடம் பேசும்போது, ”புதிய அரசு தனது முதல் வேலையாக ராஜபக்சே ராணுவ புரட்சிக்கு முயன்றது மற்றும் சதித் திட்டம் தீட்டியது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்படும்.

ராணுவ தளபதியும், போலீஸ் ஐ.ஜி.யும் ராஜபக்சேவுடன் இணைந்து செயல்பட மறுத்துவிட்ட காரணத்தாலேயே வேறு வழியின்றி அவர் அதிபர் பதவியில் இருந்து இறங்கினார். அதிபர் தேர்தலில் அமைதியான முறையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். அதைத் தவிர வேறு எதையும் மக்கள் சிந்திக்கவில்லை” என்றார்.

இந்த கருத்துகளுக்கு இலங்கை ராணுவம் உடனடியாக பதில் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் மோகன் சமரநாயகே பி.பி.சி. வானொலியில், ”ராஜபக்சே மீது இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற புகார்களை கூறுவது சிலருடைய வழக்கம். அதைத்தான் அவர்கள் தற்போது செய்து இருக்கிறார்கள். ராஜபச்சே ராணுவ புரட்சிக்கு முயன்றதாக கூறப்படுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதுபோன்ற முயற்சி எதிலும் ராஜபக்சே ஈடுபடவில்லை” என்று மறுத்து கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top