தமிழீழ மக்கள் அறவழி இயக்கம் தொடங்க வேண்டும்: பெ.மணியரசன் வேண்டுகோள்!

பெ.மணியரசன்தமிழீழ மக்கள் அரசியல் உரிமைக்காக அறவழி இயக்கம் தொடங்க வேண்டும் என்று  தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே படுதோல்வி அடைந்தது வரவேற்கத்தக்கது. ஆனால், இத்தேர்தல் முடிவு தமிழீழத்தில் இராணுவ முற்றுகைக்குள் பணையக் கைதிகள் போல் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு குடியியல் உரிமைகள் – அரசியல் உரிமைகள் ஆகியவற்றை பெற்றுத்தருமா என்பது மிகப் பெரியக் கேள்விக்குறியாக உள்ளது.

ஏனெனில், வெற்றுபெற்றுக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மைத்ரிபால சிறிசேனா தமது தேர்தல் அறிக்கையிலும் தேர்தல் பரப்புரையிலும் வடக்கு – கிழக்கு மாநிலங்களிலிருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்றும், தமிழர்கள் அழிக்கப்பட்ட “போர்க் குற்றங்கள்” குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றம் அமைத்துள்ள பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்றும் ராஜபக்சேயையோ அல்லது அவரது குடும்பத்தையோ எந்த விசாரணைக்கும் உட்படுத்த மாட்டேன் என்றும் ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு அளிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு, தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கு குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் இப்பொழுதுள்ள சிங்களக் கட்சிகளாலோ குறிப்பாக சிறிசேனா ஆட்சியினாலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

இதனால், குடும்ப ஆட்சி நடத்திய கொடுங்கோலன் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு புதியக் கருத்துகள் விவாதத்திற்கு வந்திருக்கும் இந்தக் காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள், தங்களுக்கான குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெற அறவழியில் போராடும் மக்கள் திரள் இயக்கம் ஒன்றை தொடங்க வேண்டிய தருணம் இது.

ராணுவத்தை வெளியேற்றக் கோருதல், ராணுவம் பறித்துக் கொண்ட நிலங்களை திரும்பத் தரக் கோருதல், தமிழ் மக்கள் கூட்டம் கூடவும் – அறவழியில் போராட்டம் நடத்தவும் உரிமை கோருதல், ஐ.நா. புலனாய்வு மன்றத்தை இலங்கைக்குள் அனுமதிக்கக் கோருதல், தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளும் அதிகாரத்தைக் கோருதல் போன்றவற்றை உடனடிக் கோரிக்கைகளை முன்வைத்து, பதவி – பணம் – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத தேர்தலில் போட்டியிடாத புதிய தலைமையின் கீழ் அறவழிப் போராட்டத்திற்கான மக்கள் திரள் அமைப்பைத் தமிழர்கள் உருவாக்க வேண்டும்.

சிறிதாகத் தொடங்கினாலும் தனது செயல்பாட்டின் மூலம் அது வளரும். பன்னாட்டுச் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும். அதற்காக செய்ய வேண்டிய ஈகங்களையும் செய்தாக வேண்டும். இவ்வாறான ஓர் இயக்கம் தமிழீழத்தில் தோன்றி செயல்படாதவரை, தமிழ்நாட்டிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழீழ மக்களுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் நாம் எதிர்பார்க்கும் முழுப்பலனை அளிக்காது என்பது தான், கடந்த ஐந்தாண்டுகால பட்டறிவு!

எனவே, இவர் செய்வார் – அவர் செய்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், ஈழத்தமிழர்களில் அறிவாற்றலும் செயல்துடிப்பும் உள்ள இளைஞர்கள், ஆண்களும் பெண்களும் முன்வந்து, தங்களுக்கான அரசியல் உரிமைக்கான அறவழி இயக்கத்தைத் தொடங்குவதே சாலச் சிறந்தது என்று, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் உரிமையுடனும் உண்மையான அக்கறையுடனும் கேட்டுக் கொள்கிறேன் “என்று குறிப்பிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top