மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் காட்மா எனப்படும் கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கத்தினர் அடையாள வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால், 30 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்திறகு 7 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 12ம் தேதி முதல் 15 % மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கோவை, திருப்பூர் மாவட்ட தொழில் முனைவோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அங்குள்ள தொழில் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் காட்மா எனப்படும் ஊரகக் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்த 300க்கும் அதிகமான தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து காட்மா தலைவர் ரவிக்குமார் பேசினார்.
”2012 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு யூனிட் மின்சாரம் 4 ரூபாய், 30 பைசா என்ற அளவில் இருந்தது. 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தையும் சேர்த்து ஒரு யூனிட் மின்சாரம் 6 ரூபாய் என்ற அளவில் எங்களிடம் வசூலிக்கப்பட்டது.
தற்போது 7 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று கூறி ஒரு ரூபாய் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்குள்ளாக 2 ரூபாய், 70 பைசா அளவில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான விலையை மின்சார ஒழுங்கு முறை ஆணையமும், தமிழக அரசும் இணைந்து உயர்த்தி இருப்பது குறுந்தொழில் முனைவோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ” என்றார்.
மின்கட்டண உயர்வை திரும்பப்பெறுவதுடன், தமிழகத்தில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான குறுந்தொழில் கூடங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று நடக்கும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தால் கோவை, திருப்பூரில் சுமார் 20 ஆயிரம் குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கவில்லை. இதனால், 30 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.