தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒப்புதல்: மத்திய அரசுக்கு வேல்முருகன் கடும் கண்டனம்!

பண்ருட்டி தி.வேல்முருகன்தேனி அருகே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தமிழகத்தில் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் புறந்தள்ளி மத்திய அரசு இத்திட்டத்தை முன்னெடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நியூட்ரினோ ஆய்வகத்துக்காக சுரங்கங்கள் தோண்டும் போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி பாறைகள் வெட்டப்படும். இதற்காக பல்லாயிரக்கணக்கான டன் வெடி மருந்துகள் பயன்படுத்தப்படும் போது ஒட்டுமொத்தமாக அந்த பகுதியே மாசடைந்து நாசமாகும் நிலை உருவாகும்.

இந்த நியூட்ரினோ ஆய்வுக் கூடம் என்பது முழுமையாக ஒரு ஏமாற்று வேலைதான். அணுக் கழிவுகளை கொட்டுவதற்காகத்தான் ஆய்வுக் கூடம் என்ற பெயரில் ஏற்பாடு நடப்பதாக தமிழக மக்களுக்கு அச்சம் இருக்கிறது. இது குறித்து எந்த ஒரு விளக்கத்தையும் மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

அத்துடன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படும் போது அந்த மலைப் பிரதேசம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு அப்பகுதி மக்கள் ‘அகதிகளாக’ வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து அகதிகளாக அல்லல்பட நேரிடும்.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டதற்கு வேட்டு வைக்கும் வகையில் புதிய அணை கட்ட கேரளாவுக்கு ஒப்புதல் கொடுத்து முல்லைப் பெரியாறு பாசன மாவட்ட விவசாயிகள் வயிற்றில் அடித்தது போதாதென்று மத்திய அரசு இப்போது “நியூட்ரினோ” திட்டத்தையும் அதே மக்கள் மீது திணிக்கிறது.

ஏற்கெனவே கூடங்குளம் அணு உலையால் தென் தமிழகமும், மீத்தேன் எரிவாயு திட்டத்தால் காவிரி பாசன மாவட்டங்களும் பாலைவனமாகும் அபாயம் இருக்கிறது. இன்றும் கூட மீத்தேன் எரிவாயு திட்டத்தைக் கைவிடக் கோரி மாணவர் சமுதாயம் அந்த மண்ணில் போராடிக் கொண்டிருக்கிறது.

கேரளாவின் வஞ்சகத்தால் ஆற்று நீர் உரிமை அபகரிப்பால் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிப்பிக்கும் திட்டத்தால் மேற்கு மாவட்ட விவசாய விளைநிலங்கள் பறிபோகும் அச்சமும் அகன்றபாடில்லை.

வட தமிழகத்தில் நெய்வேலி அனல் மின் நிலையத்துக்கு நிலம் கொடுத்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் 30 ஆண்டுகாலமாக ஒப்பந்த தொழிலாளர்களாகத்தான் இருக்கின்றனர். அவர்களுக்கான நீதி இன்னமும் கிடைத்தபாடில்லை. பாலாற்றில் தமிழகத்துக்கான உரிமையை ஆந்திரா அபகரித்துக் கொண்டிருக்கிறது.

கல்பாக்கம் அணு உலையால் நூற்றுக்கணக்கான மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களின் பிடியில் சிக்கி நடைபிணங்களாக வாழும் அவல நிலை தொடருகிறது. கடலூர் சிப்காட் நச்சு ஆலைகளால் தெற்காசியாவிலேயே மனிதர்கள் வாழத் தகுதியற்ற பிரதேசமாக ஐ.நா. மற்றும் சுற்றுச் சூழல் அமைப்புகளால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

இத்தனைக்கும் மேலாக தமிழர்களின் நிலத்தை கபளீகரம் செய்து அமைக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்குகிற பன்னாட்டு நிறுவனங்களான நோக்கியா, பாக்ஸ்கான் போன்றவை கொள்ளை லாபம் அடித்த கையோடு தொழிற்சாலைகளை மூடிவிட்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது. இந்த வரிசையில் டி.சி.எஸ்., விப்ரோ போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

இப்படி கூடங்குளம், மீத்தேன் திட்டம், பன்னாட்டு நிறுவனங்களின் சர்வாதிகாரம் என பல முனைகளில் இருந்தும் தமிழக மக்கள் மீதான ஒடுக்குமுறை என்பது பெரும் ஆழிப்பேரலையாக உருவெடுத்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களது வாழ்வுரிமையைக் காப்பாற்றவும் மீட்டெடுக்கவும் ஒரு பெரும் புரட்சியை நோக்கித் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் எங்களது வாழ்க்கையோடு விளையாட நியூட்ரினோவையும் எங்கள் மண்ணில் மத்திய அரசு திணிப்பதை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது.. இதற்கான எதிர்ப்புகளை இப்போது பொருட்டாக மதிக்காமல் இருக்கும் மத்திய அரசு எதிர்காலத்தில் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

தமிழ்நாட்டை பாழ்படுத்தும் நியூட்ரினோ, கூடங்குளம், மீத்தேன் உள்ளிட்ட அனைத்து நாசகார திட்டங்களையும் மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். இதற்கான போராட்டங்களில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஜாதி, மத கட்சி எல்லைகளைக் கடந்து ஓரணியில் ஒன்று திரண்டு தமிழர்களாய் இணைந்து போராடி இந்தியப் பேரரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top