தர்கா மீது தாக்குதல்: பா.ஜ.க., இந்து முன்னணி மீது நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

29-sdpiமுத்துப்பேட்டை தர்கா மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க., இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஜாம்பவானோடையில் உள்ள தர்ஹாவில் நேற்று முன்தினம் (31-12-2014) இரவு சுமார் 11:45 மணியளவில் 100க்கும் மேற்ப்பட்ட பா.ஜ.க., ஹிந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும், தர்ஹாவின் சுற்றுச் சுவரையும், அங்குள்ள பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த வன்முறை தாக்குதலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் இரு நபர்களுக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது. திட்டமிட்டு கலவரத்தை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே முத்துப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுபான்மை மக்கள் மீதும், அவர்களின் சொத்துக்கள் மீதும் இது போன்ற வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதலின் பின்னணியில் அந்த பகுதியை சேர்ந்த பா.ஜ.க.வின் முக்கிய மாநில நிர்வாகி செயல்பட்டு வருகிறார். அவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளபோதும், அவரை கைது செய்து முறையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாகவே இதுபோன்ற வன்முறை தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசு வந்த பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை மக்கள் மீது கலவரத் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில், தமிழகத்திலும் அத்தகையதொரு திட்டமிட்ட தாக்குதலை நடத்தும் நோக்கில் இந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

ஆகவே, இதுபோன்ற வன்முறை தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டு கலவரம் செய்யும் பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மை மக்கள் மீதும், சொத்துக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதலை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். முத்துப்பேட்டையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும், தூண்டிவிட்டவர்கள் மீதும் சட்டப்படி முறையான கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top