இயக்குநர் பாலச்சந்தர் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

BALACHANDERஇயக்குநர் சிகரம் என போற்றப்படும் கே.பாலச்சந்தர் காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலச்சந்தர் நேற்று இரவு ஏழு மணி அளவில் மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முழுவதும் வைக்கப்படும் என்றும், நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் , பாலசந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேபோல், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ராதிகா, ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குநர்கள் முத்துராமன், சமுத்திரகனி , சேரன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கே.பாலச்சந்தர், தான் இயக்கிய திரைப்படங்களில் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் புது வர்ணம் பூசி திரையுலகிற்கு புது இலக்கணம் வகுத்துத் தந்தவர் என தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிகளில் வெளியாகும் இக்கால நெடுந்தொடர்களுக்கு வித்திட்டவர் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாலச்சந்தர் கலையுலகிற்கு உணர்வோடு ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூறத் தக்கது என தெரிவித்துள்ளார்.

கலையுலகில் மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்விலும் மிகுந்த கண்ணியத்துடன் வாழ்ந்த பாலச்சந்தரின் மறைவு பேரிழப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திரையுலகின் ஆக்கப்பூர்வங்களுக்காகப் பாடுபட்ட பாலச்சந்தரின் பெயரில் விருதுகளை அறிவித்து மத்திய, மாநில அரசுகள் அவரை கவுரவிக்க வேண்டும் என்றும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top