பறிபோகும் தமிழர்களின் வாழ்வாதாரம் இராணுவ மயமாக்கப்படும் தமிழகம்.

1924487_10202419304056786_597598722_nஇந்திய நாட்டில் மொத்தம் 28 மாநிலங்கள் இருக்கின்றன, ஆனால் இதில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு கல்பாக்கம் அணுவுலை, கூடங்குளம் அணுவுலை, கெயில் குழாய் பதிப்பு, மீத்தேன் திட்டம், நியூட்ரினோ என்று அத்தனை ஆபத்தான திட்டங்களையும் தமிழகத்தை குறிவைத்தே இந்திய அரசாங்கம் திணித்து வருகிறது. இதற்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பும் போராட்டங்களும் நிகழ்ந்துவரும் சூழலில் தமிழகத்தை வஞ்சிக்கும் திட்டத்தின் அடுத்தக் கட்டமாக தமிழகத்தை இராணுவ மயமாக்கும் முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளது. 

சென்னையில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) வெள்ளிக்கிழமை (14.02.2014) ஏற்பாடு செய்திருந்த உற்பத்தியாளர்கள் மாநாட்டில் டிஆர்டிஓ தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ஏ. சிவதாணு பிள்ளை கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழகத்தில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு மூலம் ரூ. 6.5 லட்சம் கோடி தொழில் வாய்ப்புகளை தமிழகம் பெற முடியும் என்று கூறியுள்ளார். தருமபுரி மற்றும் மதுரை-தூத்துக்குடி இடையிலான பகுதியில் ராணுவ மற்றும் விமானப்படைக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழில் பேட்டையையும், திருச்சி-தஞ்சாவூர் இடையிலான பகுதியில் ராணுவ உதிரிபாக தொழிற் சாலைகளையும், வட சென்னையில் (எண்ணூர்-காட்டுப்பள்ளி) கடற்படை உதிரிபாக தொழிற் சாலைகளையும் தொடங்க அவர் தமிழக அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறார்.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களை கேள்விக்குறியாக்கும் திட்டங்களை இந்திய அரசு தொடர்ச்சியாக தமிழகத்தின் மீது திணிப்பதும் அதற்கு மக்கள் போராடுவதும், போராடும் மக்களை பொய் வழக்கில் கைது செய்வதும் தமிழகத்தில் தொடர் கதைகளாகிவிட்டது.

உலகிலேயே மிகவும் ஆபத்தான கதிர்வீச்சாக கருதப்படும் அணுக்கதிர்வீச்சை வெளிப்படுத்தும் அணுவுலைகளை தமிழகத்தில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் பகுதியில் இந்திய அரசு அமைத்துள்ளது. இந்த அணுவுலைகளை அமைப்பதில் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு விடயங்களை சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஷியாவைச் சேர்ந்த அணுவுலை பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஜியோ பொடோல்ஸ்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செர்கை சுடேவ். இலாபத்தை அதிகரிப்பதற்காக தரமற்ற இரும்பை வாங்கி, அதனைக் கொண்டு அணுவுலை பாகங்களை தயாரித்து, மிகப் பெரிய ஊழல் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். இவர் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி கூடங்குளத்தில் கட்டப்பட்ட முதலிரண்டு அனுவுலைகளை மூடக்கோரி தமிழக மக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கூடங்குளத்தில் மேலும் 2 அனுவுலையை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தின் மூலம் தஞ்சை பகுதியில் 1,66,000 ஏக்கர் நிலங்களை பாலைவனமாக்கும் திட்டத்தையும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் விதமாக விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க கெயில்  நிறுவனத்துடன் இனைந்து இந்திய அரசு செயல்பட்டு வருகிறது, மேலும், தமிழகத்தின் பருவநிலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளான தேனி பகுதியிலிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்பட்டு அங்கே நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது, இத்திட்டத்திற்கு ரூ.1450 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மலையை குடைந்து வெளியேற்றப்படும் பாறைக்கழிவுகளால் மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், இதனால் தமிழகத்தின் பருவமழை பொய்த்து தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டு ஒட்டுமொத்த தமிழகமும் பாதிக்கப்படும்.

இப்படி மக்கள் விரோத திட்டங்களை தடுக்க அரசியல் கட்சிகள் எந்த முன்னெடுப்புக்களையும் செய்யாமல் மௌனித்திற்குகும் நிலையில் தமிழக மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களால் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  தன்னெழுச்சியாக நடைபெறும் தமிழக மக்களின் போராட்டங்கள் இந்திய அரசிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டங்களை ஒடுக்கும் விதமாக தான் தமிழகத்தை இராணுவமயமாக்க இந்திய அரசின் திட்டத்தினை தேனில் விஷம் கலந்து தொழில்வாய்ப்பு என்றபெயரில் சிவதாணுப் பிள்ளை பேசிவிட்டு போயிருக்கிறார்.

இத்தகைய சூழலில் தமிழகம் இராணுவ மயமாக்கப்பட்டால் அரசாங்கத்தின் தவறான திட்டங்களுக்கு எதிராக போராடும் மக்களின் சாதாரண விரலசைவு கூட தீவிரவாதமாகவே பார்க்கப்பட்டும், மக்களாட்சி மக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமைகளான கருத்துரிமை பறிக்கப்பட்டு மக்களின் இயல்பான வாழ்க்கை ஒடுக்கப்படும். ஏற்கனவே இராணுவமயமாக்கப்பட்ட கேஷ்மீர், மணிப்பூர், அசாம் போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் எத்தகைய ஒடுக்குமுறைகளை சந்தித்தும் அதை எதிர்த்து போராடியும் வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே தமிழகத்தின் அமைதியான வாழ்க்கையை சிதைக்கும், தமிழக வாழ்வாதாரங்களை கேள்விக்குறியாக்கும் இத்திட்டங்களை எதிர்த்து போராட வேண்டியது தமிழக மக்களாகிய நம் அனைவரின் கடமையாகும்.

– கார்த்திக்


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. பன்னீர்

    அருமையான கட்டுரை

    தமிழகத்தை ராணுவ மைய்யமாக்கவே இப்பொழுது தமிழகதில் ஐஸஐ உளவாளி போன்ற வதந்திகளை பரப்பும் வேலைகளை செய்கின்றனர். இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக பதவி ஏற்றதும் அஜித் தோவால் சொன்னது .இந்தியா விற்க்கு அச்சுருத்தல் பாகிஸ்தானோ சீனாவோ இல்லை இது இந்தியாவிற்க்கு உள் இருகிறது என்றான்

    கடந்த மார்ச் மாதம் கெனெல் ஹரிஹரன் இலங்கைக்கு அச்சுருத்தல் தமிழ் நாட்டு தமிழர்களும் முஸ்லிம் களும் என்று சொன்னார் .

    இவகளை தொடர்பு படுத்தி பார்க்கும் போது இந்த தகவல்கள் ராணுவமயமாக போவதை நாம் உணர்ந்து கொள்ளலாம்

Your email address will not be published.

Scroll To Top