மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி!

parliamentபல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இன்றும் மாநிலங்களவையில் இன்று ஐந்தாவது நாளாக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

அவை தொடங்கிய உடன், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உறுப்பினர் ஹனுமந்த் ராவ் குறித்து மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறிய குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, எதிர்க்கட்சிகள் அவை நடவடிக்கைகளை முடக்க புதுப்புது பிரச்னைகளை எழுப்புவதாக குற்றம்சாட்டினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்பி, குலாம் நபி ஆசாத், மீண்டும் கட்டாய மதமாற்ற விவகாரத்தை எழுப்பினார். பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக மற்ற உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். பின்னர் அனைவரும் அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு வந்து கூச்சலிட்டதால் , மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் கேள்வி நேரம் தொடங்கிய போது மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பிரதமர் ஏன் விளக்கமளிக்க தயங்குகிறார் என கேள்வி எழுப்பினர். இதனால் அவையில் மீண்டும் கூச்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து, பிற்பகல் 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top