தோழர்…! – ஹரிஹரன்

தோழர் என்ற வார்த்தையின் வரலாறு என்று பார்த்தோம் என்றால் 1800களில் தான் உலக அளவில் பயன்பாட்டிற்கு வருகிறது அதுவும் பிரஞ்சு புரட்சிக்கு பிறகு தான் தோழர் எனும் வார்த்தை இடதுசாரி அரசியலில் பிரிக்க முடியாத ஒரு அங்கத்தை பெறுகிறது.

A comrade can be socially or politically close, a closeness that is found at the etymological heart of the word comrade. In Spanish the Latin word camara, with its Late Latin meaning “chamber, room,” was retained, and the derivative camarada, with the sense “roommates, especially barrack mates,” was formed. Camarada then came to have the general sense “companion.” English borrowed the word from Spanish and French, English comrade being first recorded in the 16th century. The political sense of comrade, now associated with Communism, had its origin in the late-19th-century use of the word as a title by socialists and communists in order to avoid such forms of address as mister. This usage, which originated during the French Revolution, is first recorded in English in 1884.

ஒரு வார்த்தையின் வேர்ச்சொல் ஆராய்ச்சி என்பது அம்மொழியின் வளத்தை ஆராய்வது, இதன் கீழாக உலகின் மொழிகள் எல்லாம் ஆராயப்பட்டும் அதன் தொன்மையும் கணக்கிடப்படுகிறது. இது தான் தோழர் எனும் வார்த்தையின் ஆங்கிலப்பதமான Comrade எனும் வார்த்தையும் ஆங்கில வரலாறு.

இந்தியாவில் கம்யூனிசக் கொள்கைகள் பரவும் காலத்திலேயே தோழர் என்ற வார்த்தையும் பரவ ஆரம்பிக்கிறது அதன் ஆங்கில அர்த்தமான Comrade எனும் சொல்லாடலில், அது இந்தியாவில் இந்தி, மராத்தி, வங்காளி, மலையாளி என்று யாராக இருந்தாலும் காமரேட் என்ற வார்த்தையையே உபயோகித்தனர். ஆனால் தமிழில் மட்டும் தான் தோழர் என்ற வார்த்தையை உபயோகித்தோம். இதற்கு காரணம் நம் சங்க இலக்கியத்தில் இருந்த வார்த்தையை எடுத்து காம்ரேட் எனும் வார்த்தைக்கு இணையானதாக மாற்றியவர் திரு.வி.க.

ஆம் இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை நிறுவியவர் தோழர் திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்களே, திரு.வி.க இன்று சென்னையில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஸ்பென்சர் ப்ளசா ஆங்கிலேயர் காலத்தில் அவர்களுக்கான பொருள்களை விற்பனை செய்யும் கடையாக இருந்தபொழுது அதில் பணி புரிந்தவர். அப்பொழுது இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியை ஆரம்பித்த ”கீர்ஹார்டி”யை சந்திக்கிறார். அவரிடம் இருந்து பொதுவுடமை கட்சி மற்றும் தொழிலாளர் நலன் போன்றவற்றை புரிந்து கொண்டு அதற்காக தான் பாடுபட வேண்டும் என்று 27 ஏப்ரல் 1918ல் “சென்னை தொழிலாளர் யூனியனை” ஆரம்பித்தார். இதன் தலைவராக 12 வருடங்கள் இருந்து தொழிற் சங்கத்தை வழிநடத்தினார்.

திரு.வி.கவிற்கு பிறகு தொழிற் சங்கத்தின் தலைவராக பொம்மன்ஜி வாடியா என்பவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார், மான்செஸ்டர் தொழிலாளர்களின் அழைப்பின் பெயரில் இங்கிலாந்து சென்று அவர்களிடம் இந்திய தொழிலாளர்கள் படும் துயரங்களை விளக்கி கூறி அவர்கள் இங்கிலாந்து அரசிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையை எடுத்துக் கூறிவிட்டு சென்னை திரும்பினார். அப்பொழுது அவரை வரவேற்று மாபெரும் கூட்டம் சென்னையில் நடை பெற்றது. அப்பொழுது வாடியா அவர்கள் உரையை ஆரம்பித்த பொழுது ஆங்கிலத்தில் Comrades என்று ஆரம்பித்தவுடன் அதை தமிழில் மொழிபெயர்த்து “தோழர்களே” என்று கூறினார் திரு.வி.க இது தான் தோழர் என்ற வார்த்தை வெகுமக்கள் புழக்கத்தில் முதன் முதலாக பயன்படுத்தப்பட உதவியது. tholar1

இப்படி இந்தியாவில் தொழிற்சங்க வரலாற்றுடன் ஆரம்பித்த தோழர் என்ற வார்த்தை பல போராட்டங்களில் பங்கு பெற்று வந்ததே. 1962ல் இந்தியா சீன போரின் பொழுது இந்தியாவில் இருந்த கம்யுனிசவாதிகள் சீன உளவாளிகள் என்ற பெயரில் ஒடுக்கப்பட்டனர். அப்பொழுது தோழர் எனும் வார்த்தையும் தமிழ் சமூகத்தில் இருந்து விலக ஆரம்பித்தது ஆம், தோழர் என்ற வார்த்தையை உபயோகிப்பவன் இந்தியாவின் எதிரியான சீனாவின் நண்பனாக பார்க்கப்பட்டு ஒதுக்கப்பட்டார்கள். நம் தமிழ் மக்களின் தேசப்பற்று அத்தகையது, அந்த காலகட்டங்களிலேயே தோழர் எனும் வார்த்தையை தொலைக்க ஆரம்பித்தோம். ஆனால் தோழர் என்ற வார்த்தை சங்க இலக்கியத்தில் இருந்த வார்த்தையை எடுத்து நம்மை கையாளவைத்தார் திரு.வி.க.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி என்பது உயர்வு நவிற்சி அணியோ இல்லையோ.. தமிழ் மொழியின் பழமை நம் அனைவரும் மிகவும் அருமையாக உணரக் கூடியதே.

`இவர் யார்?` என்குவை ஆயின்,

இவரே ஊருடன் இரவலர்க்கு

அருளித் தேருடன் முல்லைக்கு

ஈத்த செல்லா நல்லிசை

படுமணி யானைப் பறம்பின்

கோமான் நெடுமாப் பாரி மகளிர்;

யானே தந்தை தோழன்;

இவர்என் மகளிர்;

அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே;

நீயே, வடபால் முனிவன் தடவினுள்

தோன்றிச் செம்புபுனைந்து

இயற்றிய சேண்நெடும் புரிசை

உவரா ஈகைத் துவரை யாண்டு

நாற்பத்து ஒன்பது வழிமுறை

வந்த வேளிருள் வேளே!

கபிலர் எனும் புலவர் தனது பாடலில் தோழன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பாடல் காட்சியுடன் காணும் பொழுதே கபிலர் இரண்டு பெண்களுடன் ஒரு அரசவையில் நுழைகிறார் அங்கு கபிலரை வரவேற்ற மன்னன் அவர் அழைத்து வந்திருக்கும் பெண்களைப் பற்றி தெரியாமல் திகைத்த நேரம் அவர்களை அறிமுகப்படுத்தி கபிலர் பாடுகிறார், இதன் உள் உரைந்திருக்கும் ஆயிரம் தகவல்களை நாம் பெறலாம். ஆம் பாரி மன்னன் மீது மூவேந்தர்களும் படையெடுக்க காரணங்களுள் ஒன்று பாரியின் மகள்கள் அவர்களை மூவேந்தர்களில் இருவருக்கு திருமணம் செய்து கொடுத்தால் ஒருவரை பகைக்க வேண்டியதாகிவிடும் என்று மூவேந்தர்களுக்கும் பெண் கொடுக்க மறுத்துவிடுகிறார் பாரி மன்னன். ஏற்கெனவே பாரியின் புகழ் பரவியிருந்ததாலும் பாரியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த மூவேந்தர்களும் ஒன்றிணைந்து பாரியையும் அவரின் அரசையும் அழிக்கின்றனர். அப்பொழுது கபிலர் பாரியின் மகள்களை கூட்டிக் கொண்டு வேறு நாட்டுக்கு சென்று அந்த மன்னர்களை பாரியின் குலம் தழைக்க வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள கேட்கிறார். அப்படி ஒரு நாட்டின் மன்னனை சந்திக்க செல்லும் பொழுது நடந்தவையையே இந்த பாடல் குறிப்பிடுகிறது.

வடக்கில் இருந்து வந்த முனிவன் செம்பினுள் உருவான ஆற்றின் கரையில் உள்ல தடவு எனும் இடத்தில் 49 தலைமுறைகளாக அரசாண்டு வரும் குலத்தில் பிறந்த மன்னருக்கு எல்லாம் மன்னனே, இவர்கள் யார் எனக் கேட்பாயெனில் இவர்கள் உதவி என்று கேட்டு வந்தோருக்கு எல்லாம் அள்ளி அள்ளி கொடுப்பவரும், முல்லைக் கொடிக்கு தனது தேரையே கொடுத்தவருமான பாரி மன்னனின் புதல்விகள், நானோ இவர்களின் தந்தையின் தோழன் என்கிறார், மேலும் இவர்கள் என் மகள்கள் என்று தன் தோழனின் மகள்களை தன் மகள்களாக குறிப்பிடுகிறார்.

ஒரு புலவன் ஒரு அரசனை தோழன் என்று குறிப்பிடுகிறார், இதில் அங்கிருந்த சமூக சமுதாய நிலைகளை உணர்ந்து கொள்ளலாம். அன்றைய மன்னர்கள் புலவர்களை எப்படி போற்றி பாதுகாத்தனர் என்பதும் விளங்கும். இதனாலேயே நமக்கு பல தமிழ் இலக்கியங்களும் கிடைத்திருக்கின்றன தமிழ் மொழியின் தொன்மையையும் நம்மால் உணரக் கூடியதாக இருக்கிறது.

இப்படி சங்க இலக்கிய காலத்தில் இருந்து இருக்கும் தோழர் என்ற தமிழ் வார்த்தை இடையில் கம்யூனிசத்தின் வார்த்தையாக அரசியல் வார்த்தையாகவும் சுருக்கப்பட்டு இப்பொழுதும் மக்கள் போராட்டங்கள் நடக்கும் இடங்களில் மட்டும் பயன்படுத்தப்படும் வார்த்தையாக சுருங்கிவிட்டது.

– ஹரிஹரன்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top