பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு வேல்முருகன் கண்டனம்!

panrutti_VELMURUGANதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழர் நலனுக்காக தமிழர் வாழ்வுரிமைக்காக அரை நூற்றாண்டு காலமாக போராடி வரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஊடகங்கள் முன்னிலையில் “பிரதமர் மோடியை பற்றியோ, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை பற்றியோ தவறாகப் பேசிவிட்டு பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்பி விட முடியாது” என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் இன விடுதலைக்காக போராடுகிற தலைவர்கள் அனைவரையும் எப்போதும் ஒருமையில் விமர்சித்து பேசுகிற 4–ந் தர பேச்சாளர்தான் எச்.ராஜா என்பதை இந்த தமிழகம் நன்கறியும். தந்தை பெரியாரை, செருப்பால் அடிப்பேன் என்று திமிராக பேசியதும் இதே எச்.ராஜாதான். 2 நாட்களுக்கு முன்பு கூட தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை தமிழகத்தில் கொண்டாட அனுமதிக்கக்கூடாது என்று சுப்பிரமணிய சுவாமியுடன் சேர்ந்து கொக்கரித்ததும் இதே எச். ராஜாதான்!

தமிழர் சுயமரியாதையை சீண்டுவதையே தன் ‘வாழ்நாள் கொள்கையாகக் கொண்டிருக்கிற எச்.ராஜா, வைகோவை பார்த்து “நாவடக்கம்“ தேவை என்று பேசியிருப்பது சாத்தான் வேதம் ஓதுவதாகத்தான் இருக்கிறது.

அத்துடன் “வைகோ தமது நாவை அடக்காவிட்டால் அவரது நாக்கை அடக்குவது எப்படி என்பது ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டனுக்கும் தெரியும்“ என்றும் மிரட்டியிருப்பது வைகோ மீது வன்முறையை ஏவிவிடும் வகையில் தொண்டர்களை தூண்டிவிடுவதாகத்தான் இருக்கிறது.

இத்தகைய கொலை மிரட்டல்களுக்கு தமிழர் வாழ்வுரிமைக்குப் போராடுகிற எவரும் அஞ்சிவிட மாட்டோம் என்பதை எச். ராஜா நினைவில் கொள்ள வேண்டும். தன்னுடைய இந்த போக்கை எச்.ராஜா நிறுத்திக் கொள்ளாவிட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினரின் போராட்டங்களை எச்.ராஜா எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top