காஷ்மீர்–ஜார்க்கண்ட் மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கு நாளை முதல் கட்ட தேர்தல்

vote countingஜம்மு–காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளன.

ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 87 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகள் இருக்கின்றன. இந்த 2 மாநிலங்களிலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாளை முதல் கட்டமாக ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் கார்கில், லடாக், பர்தி போரா உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இது போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த 13 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கிறது.

ஜம்மு–காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் 123 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதிகளில் 787 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை தேர்தல் நடைபெறும் 13 தொகுதிகளிலும் 199 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சி மற்றும் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முத்திமோச்சா, காங்கிரஸ், பா.ஜனதா, ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மார்க்.கம்யூ உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

2 மாநிலங்களிலும் நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளனர். எல்லைக் காட்டுப்பாடு கோடு அருகே உள்ள கார்கில் தொகுதிக்கு உட்பட்ட கிராம மக்கள் அடிப்படை வசதி செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 35 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றன. ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள ஜம்மு–காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தனர்.

நாளை நடைபெறும் முதல் கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 2–ந்தேதி நடைபெறுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top