ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்தது ரஷியா மற்றும் சீனா.

ஐ.நா.சிரியாவுக்கு எதிராக தடைகளை விதிக்க வகைசெய்யும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மேலை நாடுகள் நிறைவேற்ற மேற்கொண்டுள்ள முயற்சியைத் தடுக்கும் நடவடிக்கையில் ரஷ்யாவும் சீனாவும் இறங்கியுள்ளன.

சிரியா விவகாரம் தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தினை, ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் விடாலி சுர்கினும் சீனாவின் ஐ.நா. தூதரும் புறக்கணித்தனர்.

சிரியாவில் பதற்றத்தை தூண்டிவிடவே இந்த தீர்மானம் உதவும் என்றும் இது வெறும் அரசியல் நடவடிக்கை என்றும் சுர்கின் குற்றம்சாட்டினார். தீர்மான வாசகங்கள் குளறுபடியானவை. அதை மேம்படுத்த முடியாது. எனவேதான் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றார் சுர்கின்.

நிலைமையை மேம்படுத்த இந்த தீர்மானம் உதவாது. மாறாக மனிதாபிமான உதவி நடவடிக் கைகளுக்குத்தான் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் சுர்கின். சிரிய அரசை ஆதரித்து சீனாவும் ரஷ்யாவும் செயல்படுகின்றன.

3 ஆண்டு காலமாக நடக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி சிரிய அதிபர் பஷார் அல் ஆசாதை வற்புறுத்தி மேலை நாடுகள் ஆதரவில் கொண்டு வரப்பட்ட 3 தீர்மானங்களை சீனாவும் ரஷ்யாவும் முறியடித்தன.

15 உறுப்பினர் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் ரஷ்யா அதை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடிக்கும் என்பதை சுர்கின் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

சிரியாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க நடை முறைக்கு எளிதான நடவடிக்கை அவசியம். நிலைமையில் மேம்பாடு ஏற்பட்டதன் காரணமாகவே, போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸ் நகரில் முற்றுகைக்கு உள்ளான நூற்றுக்கணக்கான பொதுமக்களை மீட்க மீட்புப்பணி ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்றார் சுர்கின்.

மிக மிக மோசமான சூழ்நிலையில், உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பு பிரதிநிதிகளும் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுகின்றனர். ஹோம்ஸ் நகரிலிருந்து 800க்கும் மேற்பட்டவர்களை மீட்டதுடன், உணவு, மருந்துப்பொருள்கள் விநியோகிக்கப்பட்டன என்று ஐ.நா. மனிதாபிமான உதவிப் பிரிவு தலைவர் வேலரி அமோஸ் தெரிவித்தார்.

சண்டை நிறுத்த ஏற்பாடு மீறப்பட்டதால் 11 பேர் உயிரிழந்தனர். ஐ.நா. மற்றும் சிரியா செம்பிறை பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்க முடியாது என்றும் அமோஸ். தெரிவித்தார்.

இந்நிலையில், சிரியா தொடர்பாக சிறப்புக் கூட்டம் ஒன்றை ஜெனிவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாஸ்கோ யோசனை தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் அமெரிக்கா, ஐ.நா., ரஷ்யா, சிரியாவின் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பு பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top