சிறையில் நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை: முருகன், சாந்தன், பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம்.

பேரறிவாளன்ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை பெற்ற நாங்கள் சிறையில் மகிழ்ச்சியாக இல்லை என்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் எழுத்துப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவும், கடந்த 2011ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், கருணை மனு நீண்ட காலம் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த காரணத்தால், இவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கூறி உச்ச நீதிமன்றத்தில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சிவகீர்த்தி சிங் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு கடந்த 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில் பேரறிவாளன் உள்பட மூன்று பேரின் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

அப்போது,மதிய அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் வாஹன்வதி , கருணை மனு காலதாமதத்தால் மூவரும் மன அழுத்தத்தில் இருக்கவில்லை என்றும், சிறையில் மூவரும் இயல்பான மனநிலையில் இருந்ததாகவும், சித்ரவதைக்கோ, மனவேதனைக்கோ அவர்கள் ஆளாகவில்லை என்றும், கருணை மனு தாமதத்தை காரணம் காட்டி தூக்குத் தண்டனையை குறைக்க கூடாது என்றும் வாதாடினார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி ஏதும் குறிப்பிடாமல் இதன் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் எழுத்துப்பூர்வமான வாக்குமூலம் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட்டுள்ளது. அதில், சிறையில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததாக மத்திய அரசு கூறுவதை ஏற்க கூடாது என்றும், தூக்குத் தண்டனை பெற்றவர்களின் மனநிலை பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும், மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக கல்வி, இசை கற்றதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் தங்களின் கருணைமனு 15 ஆண்டுகளுக்கு பிறகு நிராகரிக்கப்பட்டத்தில் ஏதோ அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top