பாஸ்போர்ட் பெற ஆதார் அட்டை அவசியம் : மத்திய அரசு

Aadhar_card_1560762gபாஸ்போர்ட் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என  மத்திய அரசு  முடிவு செய்துள்ளது.

வேலை, உயர்கல்வி, வியாபாரம், சுற்றுலா போன்றவற்றுக்காக வெளிநாடு செல்வோருக்கு பாஸ்போர்ட் அவசியம். பாஸ்போர்ட் எடுத்த பின்பு எந்த நாட்டுக்கு செல்கிறோமோ அந்த நாட்டின் விசா எடுக்க வேண்டும்.

பாஸ்போர்ட் வழங்கும் பணியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவனித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பாஸ்போர்ட் பெறுவதற்கு ரேஷன் கார்டு மற்றும் இருப்பிட சான்றிதழுடன் கூடிய 2 அடையாள அட்டைகள், வயது சான்றிதழ் அவசியம். வயது சான்றிதழுக்காக பள்ளி கல்வித்துறை வழங்கும் இடமாற்றுச் சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அடுத்ததாக குற்றப்பின்னணி குறித்து போலீஸ் அறிக்கையும் கேட்கப்படுகிறது. இதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்ததும் பாஸ்போர்ட் அலுவலகமே சம்மந்தப்பட்ட போலீஸ் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும்.

பாஸ்போர்ட்டு பெறுவதற்கான காலதாமதத்தை குறைக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் ரேஷன் கார்டு, இருப்பிட சான்றிதழ், வயது சான்றிதழ் ஆகியவற்றால் தான் தாமதம் ஏற்படுகிறது.

முந்தைய அரசு அறிமுகப்படுத்திய ஆதார் அட்டை திட்டத்தில் இவை மூன்றும் ஒரே சான்றிதழாக இடம் பெற்றுள்ளன. எனவே ஆதார் அட்டை அடிப்படையிலேயே இனி பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் ஆதார் அட்டையை அரசின் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று உள்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் உளவுதுறை ஆகியவற்றுடன் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். இறுதியாக பிரதமர் மோடி இதற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து பாஸ்போர்ட்டுக்கு ஆதார் அட்டை அவசியம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பாஸ்போர்ட் பெற ஆதார் அட்டை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. விரைவில் ஆதார் அட்டை அவசியம் என உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதே போல் குற்றப்பின்னணி தகவல்களையும் எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய குற்ற ஆவண காப்பகம், நாடு முழுவதற்குமான குற்ற தகவல்களை கம்ப்யூட்டர் மயமாக்கி வருகிறது. இன்னும் 2 மாதத்தில் இது முடிந்து விடும். அதில் குற்றவிவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

எனவே பாஸ்போர்ட் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பதாரின் தகவல்களை ஏற்று போலீஸ் விசாரணை இல்லாமலேயே பாஸ்போர்ட் விரைவில் கிடைக்க வழிவகை ஏற்படும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top