ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி: தமிழக அரசு கடும் எதிர்ப்பு!

தமிழக அரசுஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 9ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து, பேரணி அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் 7 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று (7ஆம் தேதி) மதியம் வந்தது. அப்போது, சென்னை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 காவல் நிலைய ஆய்வாளர்கள் பதில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், ”ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பாதுகாப்புப் படையினரைப் போன்று சீருடை அணிந்து செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மத வழிபாட்டுத் தலங்கள் வழியாகச் செல்லவும் திட்டமிட்டுள்ளதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டது” எனக் கூறப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமசுப்பிரமணியன், காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய அனுமதிக்குமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரியது.  ஆனால் அக்கோரிக்கையை தலைமை நீதிபதி நிராகரித்துவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top